பக்கம்:கனிச்சாறு 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 127


83

வாழ்வும் தாழ்வும்!


விண்ணை அளந்திடும் வல்லவர் - தொலை
வெங்கதிர் தோற்ற முணர்ந்தவர் - இந்த
மண்ணை அளந்திடக் கற்றவர் - வான
மாவெளி ஊர்ந்திடும் மேதையர் - பொருள்
வண்ண மறிந்தவர் மக்களின் - உயிர்
மாய்தலை வெல்ல முயல்பவர் - என
எண்ணத் தொலைவிலர் தோன்றினும் - மன
ஏற்றத்தில் யாவரும் தாழ்கின்றார்! 1

ஊர்ந்தவர் வானில் பறக்கின்றார் - விலங்
கொத்தவர் நல்லுடை சேர்க்கின்றார் - மடஞ்
சேர்ந்தவர் யாவரும் கற்கின்றார் - பிணி
சோர்ந்தவர் நோயினை வெல்கின்றார் - பணி
தேர்ந்தவர் இவ்வுல குய்யவே - உயிர்த்
தேவைகள் காண்பவர் ஆயினும் - கடல்
ஆர்ந்த உலகினில் எங்கணும் - மக்கள்
அன்பிலும்; பண்பிலும் தாழ்கின்றார்! 2

சேற்றைக் குழப்பிக் குடில்களைப் - பண்டு
செய்துயிர் வாழ்ந்த வழியினர் - விண்
காற்றை வளைப்பவர் போலவே - பல
கட்டுகின் றார்மனை வாழவே! - சுனை
ஊற்றுகள் தேடிக் குடித்தவர் - குழல்
ஊன்றிநீ ரோட்டங் கொணர்கின்றார் - பல
மாற்றங்கள் காண்கின்றார் ஆயினும் - உள
மாண்பினில் யாவரும் தாழ்கின்றார்! 3

‘அன்பின் விளைநிலம்’ ஆருயிர் - தரும்
‘ஆக்கம்’ எனத்தகும் பெண்டிரும் பெருந்
தென்புகள் கொண்டனர் போல்வராய் - உளத்
தாய்மையை, மென்மையை நீக்கியே - பல
வன்பணி யாற்றப் புகுந்தனர் - அன்பு
வாழ்வைத் துறந்தனர்! ஐயகோ! - உள
அன்பினி எங்ஙனம் வாழ்ந்திடும்? - மன
ஆற்றலில் யாவரும் தாழ்ந்திடின்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/162&oldid=1444193" இலிருந்து மீள்விக்கப்பட்டது