பக்கம்:கனிச்சாறு 4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 கனிச்சாறு – நான்காம் தொகுதி


85

பிறப்பொக்கும்!


பிள்ளை பிறந்தது; பிறக்கும் போதே
கொள்ளை அழகதன் கூடப் பிறந்தது!

உறுப்புகள் யாவும் அதனுடன் பிறந்தன.
கறுப்பு நிறமும் கூடவே பிறந்தது.

மற்றவர் பெற்ற மருத்துவ மனையில்தான்,
பெற்றெடுத் தாளதைப் பெற்ற பொற்றொடி!

“பிறந்தது ஆணா பெண்ணா” என்றனர்;
அரும்பெரும் மகிழ்வோ “டாணே” என்றாள்.

“அச்செலாம் உன்போல்” என்றனர்; அதன்பின்
உச்சி குளிர்ந்தாள்; உவகை வழிந்தது.

“பிறந்த குழந்தையின் பிறப்பென்ன” என்றனர்;
“பிறந்தது மாந்தப் பிறப்பே” என்றாள்.

"குழந்தையின் குலத்தைக் கேட்டோம்' என்றனர்;
“பழந்தமிழ்க் குல”மெனப் பாவை மொழிந்தாள்.

“அப்படி என்றால் அதுவென்ன ‘சாதி’?” -
இப்படிக் கேட்கவே எழுந்தாள் நங்கை;

“கண்ணொடு பிறந்தது; காதொடு பிறந்ததே
உண்ணும் வாயொடும் உடலொடும் பிறந்ததே;

நலத்தொடு பிறந்தது; நானறிய எந்தக்
குலத்தொடும் பிறக்கிலை; குணத்தொடும் பிறக்கிலை;

தூய்மை உடலொடும் தூய்மை அறிவொடும்
தூய்மை உளத்தொடும் தோன்றிய குழந்தைக்கு

ஏது ‘சாதி’? இழிவுயர் வெல்லாம்?
தீதிலாப் பிறப்பைத் தீப்பிறப் பாக்குகிறீர்!”

என்று மொழிந்தாள் ஏந்திழை;
நின்று கேட்டவர் நீட்டினர் நடையே!

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/165&oldid=1444197" இலிருந்து மீள்விக்கப்பட்டது