பக்கம்:கனிச்சாறு 4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 131


86

உள்ளத்தனைய துயர்வு!


பரிதி நடந்துசெலும் பாதையிலும் தண்ணின்
அரிதாம் நிலவொளியின் ஆட்சியிலும் நன்கமைந்து,
காலப் பிரிவாலும் காற்றாலும் சீர்பெற்ற
கோலத் தமிழகத்தைக் கோள நூல் வல்லார்கள்
பாராட்டிப் பேசுகின்றார் என்னும் பெருமையொடு,

சேரனென்னும் வீரன் செழுந்தமிழர் பாட்டனென்றும்,
சோழனென்னும் வேந்தனுக்குச்
சொந்தம்யா மென்றுரைத்தும்,
வாழும் பழமதுரை வாழ்ந்திருந்த பாண்டியராம்
வித்தில் விளைந்திருக்கும் வீரஞ்சேர் கூட்டமென்றும்,
கத்திப் பழங்கதைகள் கூறி வருவதல்லால், 10
நம்மில் வளர்ந்துவரும் நச்சடிமைக் கீழ்க்குணத்தை
இம்மி யளவேனும் எண்ணி நாம் பார்த்ததில்லை!

வீரத் துயர்ந்திருந்த வேந்தரென்று பேசுகின்ற
சேரரொடு பாண்டியரும், சோழத் தமிழரசும்,
தம்முள் குலைவுற்றுத் தாழ்வெய்தி மாண்டதனை,
நம்முன் அறிந்திருந்தும் நல்லுறவு கொண்டதில்லை!

பண்டைப் பெருந்தமிழன் பான்மையினைக் கூறிடுங்கால்
அண்டை இருப்பவனை அன்பொழுகப் பார்த்ததில்லை!

பாரியென்றும், ஓரியென்றும் பைந்தமிழின் வள்ளலரைக்
கூறிடுவ தல்லால் குறுணையள வீந்ததில்லை! 20

பாவியங்கள் ஐந்தென்று பாடிக் களிப்பதல்லால்
பாவியஞ்சொல் நல்லுரையைக்
                             கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை!

கீரன் துணிவுபற்றிக் கூறிமகிழ் வேற்பதல்லால்
வீரத் துணிவில்லை; நெஞ்சில் வலிவில்லை!

சாதிப் பெருமடமும், சாத்திரமும், பன்னூலை
ஓதி விடுவதனால் ஓய்ந்துவிடப் போவதில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/166&oldid=1444199" இலிருந்து மீள்விக்கப்பட்டது