பக்கம்:கனிச்சாறு 4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 கனிச்சாறு – நான்காம் தொகுதி


கீழென்றும், மேலென்றும் கொள்ளுதலால் இந்நாடு
பாழடைவ தல்லால் பயனடையப் போவதில்லை!

செல்வச் சிறப்பென்றும், ஏழ்மைச் சிறுமையென்றும்,
பல்வாறு கூறிப் பயனெதுவும் கண்டதில்லை! 30

கோளறிந்து திங்கள் குடியேறுங் காலத்தில்
வாளெறிந்து, வில்லேவி வாழ்ந்துவிடப் போவதில்லை.

அண்டத் திருவுலகை ஆய்வாளர் நாளும் போய்க்
கண்டறியும் காலத்தில் காலமொன்றும் செய்வதில்லை!

மெய்யில் அழுக்கேறி, நெஞ்சில் இருள்வைத்துக்
கைகூப்பிப் போற்றக் கடவுளருள்(!) சேர்வதில்லை,

தம்மைப்போ லோருயிரைத் தாழ்த்தி நடக்கையிலே,
செம்மையாய்ப் பண்டைச் சாத்திரங்கள் பேசுவதில்
நாணமில்லை! மக்களுள்ளே நல்லொழுங்கு தானுமில்லை!
மாணப் பெரும் பேச்சில் மக்களுயர் வேற்பதில்லை! 40

“எவ்வுயிரும் ஓருயிராய் எண்ணீர்! பெருமையுறுஞ்
செவ்வை ஒழுங்கேற்பீர்! சேர்ந்தொருங்கே வாழ்வீர்!
உயரன்பு கொள்வீர்! உறுந்தமிழ்நூல் கற்பீர்!
அயர்வின்றி எப்பணியும் ஆற்றி உயர்வடைவீர்!
நன்றல்ல நீக்குவீர்” என்று நவின்றொருவன்
ஒன்றினையும் கொள்ளா தொழிந்து விடின் நாமவனை
என்னென்று கொள்ளுவோம்? எள்ளி இகழோமா?
பொன்னென்றா கொள்ளுவோம்?
போவென்று தள்ளோமா?

உள்ளத் துயர்வில்லா ஓதுகல்வி கல்வியன்று;
வள்ளுவரும் உள்ளத்து வாய்மை உயர்வென்றார்! 50
வெள்ளைத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

-1958
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/167&oldid=1444200" இலிருந்து மீள்விக்கப்பட்டது