பக்கம்:கனிச்சாறு 4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 133


87

குச்சுக் குடிசையிலே !


ஆராரோ ஆரரிரோ, ஆராரோ ஆரரிரோ!
ஆரரிரோ ஆரரிரோ, ஆராரோ ஆராரோ!

பாராளும் அன்பே! பணிவே,நீ கண்ணுறங்கு;
சீராளும் வேந்தே! செதுக்காத பொற்சிலையே!

வாடாத பூவே! வயிறுவக்க வந்தவனே!
தேடாத செல்வமே! தேனுருவே கண்ணுறங்கு!

முத்தெடுத்துக் கோத்த முழுவயிரத் தொட்டிலில்லை;
பத்துத்திங்கள் சேர்த்துப் பணம்போட்ட தொட்டிலடா!

மேலே கிளிகொஞ்ச மின்னிழையார் ஆட்டுவதற்
கேலாத ஏழையடா! ஏந்தியுனைப் பெற்றவர்கள்!

மெத்தென்று பஞ்சுமெத்தை மேனிவருந் தாமலிட,
சொத்தறியாப் பஞ்சையடா! சீரே உனைப்பெற்றோர்!

ஏதுமில்லா ஏழையர்பால் ஏன்பிறந்தோம் என்றுனது
தீதில்லா நெஞ்சத்தில் தேனே நினைக்காதே!

நெய்மணக்கப் பால்காய்ச்சிச் சோற்றைப் பிசைந்தெடுத்தே
கைமணக்க ஊட்டும் குடும்பமில்லை உன்குடும்பம்!

பாற்சோறு மில்லையென்று பாவியவள் சொன்னவுடன்
வேறுபட்டுப் போனதென்ன வேந்தே,உன் பூமுகமும்?

வானத்தே பூத்துவரும் வெண்ணிலவை நீயென்றும்
காணும் படியிருக்கும் கூரையடா உன்குடிலும்!

ஏங்கிக் கிடக்கையிலே ஏதுமில்லா என்வயிறு
தாங்கிப் பிறந்தவனே! தேடரிய செல்வமே!

வாய்மணக்க என்றன் வயிறும் மணந்திடவே
சேயாகப் பிறந்திருக்கும் செல்வமே கண்ணுறங்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/168&oldid=1444201" இலிருந்து மீள்விக்கப்பட்டது