பக்கம்:கனிச்சாறு 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 141


‘ஒருவனே இறைவன்’ - என்
றுரைப்பது நாம்தாம்!
உருவமோ, பெயரோ
ஒருகோடி இருக்கும்!
தெருவெலாம் கோயில்கள்;
திருவிழா, பலவகை!
ஒருநொடி யாகிலும்
உணர்ந்திருப் போமா?
படிப்ப தெதற்குத் தம்பி - கடைப்
பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா?

‘யாவரும் ஒரு நிறை’-
இனிக்க உரைக்கிறோம்!
‘ஏவலன் செல்வன்’-என்
றிருப்பதை மறைக்கிறோம்!
கூவி, இரந்து
குலைபவர் உழைப்போர்;
மூவேளை உண்டு
மூடர் கொழுப்பதா?
படிப்ப தெதற்குத்தம்பி? - கடைப்
பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா?

‘எல்லாரும் இந்நாட்டு
மன்னர்’ - என்கிறோம்.
பொல்லாப் பிழையுரை!
பொன்போன்ற மண்ணுரை!
கல்லாரும் கயவரும்
கள்ளரும் மன்னரா?
கல்வியும் ஒழுங்கும்,
கயமையும் ஒன்றா?
படிப்ப தெதற்குத் தம்பி - கடைப்
பிடிப்ப தற்கா? பீற்றுவ தற்கா?

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/176&oldid=1444434" இலிருந்து மீள்விக்கப்பட்டது