பக்கம்:கனிச்சாறு 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 கனிச்சாறு – நான்காம் தொகுதி


95

மாந்த உருவமே!


தெருத்தெரு வாக, வீடுவீ டாக,
ஒருவேளைச் சோற்றுக்கு இரந்து திரிகின்ற
உருவமும் மாந்த உருவமே! - அந்த
உருவமும் மாந்த உருவமே!

மெய்யும் நம்போல்; மேனியும் நம்போல்;
கைகால் உண்டு; கண்கா துண்டு;
அழுக்கிருந் தாலும் அழகும் இருக்கும்;
ஒழுக்கமும் இருக்கும்; உயர்வும் இருக்கும்;
இருப்பினும் நம்போல் வாழ்க்கை இல்லையே!
உருவமும் மாந்த உருவமே! - அந்த
உருவமும் மாந்த உருவமே!

உருக்குலைந் திட்ட உருவம்! ஒளியிலாது
ஒட்டி உலர்ந்த கன்னம்! திரிபோல்
கட்டித் திரண்டு காய்ந்த தலைமயிர்!
குழிந்த கண்கள்! கரும்பினில் சாறு
பிழிந்த சக்கையே கைகளும் கால்களும்!
வாடிய மாம்பழத் தோலின் மீதில்
ஓடிய சுருக்கம் உடம்பெலாந் தோய்ந்த
உருவமும் மாந்த உருவமே - அந்த
உருவமும் மாந்த உருவமே!

மொச்சை நாற்றம் வீசிடும் அழுக்குடை!
கொச்சைப் பேச்சு! கூனிய முதுகு!
தளர்ந்த தோள்கள்! தள்ளாடும் மென்னடை!
கிளர்ந்த தீப்பசி; கெஞ்சிய வாழ்க்கை!
பெருமையே இல்லாச் சருகுகள்! - ஆயினும்
உருவமும் மாந்த உருவமே - அந்த
உருவமும் மாந்த உருவமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/177&oldid=1444435" இலிருந்து மீள்விக்கப்பட்டது