பக்கம்:கனிச்சாறு 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 143


வெட்ட வெளியிலோ, வீதி விளிம்பிலோ
கொட்டும் மழையிலோ, கொளுத்தும் வெயிலிலோ,
சாய்க்கடை யோடு சாய்க்கடை யாக-
நாய்க ளோடு நாய்க ளாக-
கொட்டிய இலைகளைக் குடைந்த வாறாய்
வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிச் சாகும்
உருவமும் மாந்த உருவமே! - அந்த
உருவமும் மாந்த உருவமே!

வானை அளாவக் கட்டிய வளமனை!
நீணிலம் அளக்கும் நெடிய ஊர்திகள்!
நிலவுக்குத் தாவும் அளவுக்கு அறிவியல்;
நாகரிக வாழ்க்கை; ஆரவா ரங்கள்!
விழாக்கள்; விருந்துகள்; உழாத விளைவுகள்!
செல்வக் கொழிப்பு! ஆயினும் ஒருபுறம்
இல்லாமை என்னும் இழிந்த பாழ்நிலை!
அந்த நிலையினில் அமிழ்ந்து சாகும்
உருவமும் மாந்த உருவமே! - அந்த
உருவமும் மாந்த உருவமே!

புழுப்பிறப் பல்லர்; புழுவினும் தாழ்ந்த
இழுக்குடை வாழ்வில் இன்னுஞ் சாவதா?
விலங்குகள் அல்லர்; விலங்கினும் தாழ்ந்த
நலமிலா வாழ்வில் நலிவுற் றிறப்பதா?
நாய்போல் இருப்பின் நாய்களும் உதவும்;
பன்றிபோல் இருப்பின் பன்றியும் உதவும்!
நன்றி யுணர்விலா நம்மவர் நடுவில்
குன்றி ஒடுங்கிக் குலைந்து சாகின்ற
உருவமும் மாந்த உருவமே! - அந்த
உருவமும் மாந்த உருவமே!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/178&oldid=1444436" இலிருந்து மீள்விக்கப்பட்டது