பக்கம்:கனிச்சாறு 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 கனிச்சாறு – நான்காம் தொகுதி


96

ஏழைக்கு ஏழை இரங்குவதுண்டா?


ஓடம் விடுகிறாய்! ஓடக் காரனே!
மாடம் அன்று,உன் வீடு;மண் குடிசை!
ஏந்தல் இல்லை,நீ; ஏழைக் குடிமகன்.
காந்தும் பசியினால் காய்ந்ததுன் வயிறு.
நெளித்து நீட்டி ஓடம் வலித்தபின்
புளித்த கூழுக்கு அலைகின்றாய்; அறிவேன்!
கருக்கும் வெயிலில் கருகிய துன்உடல்;
உருக்குலைந் திருக்கும் உனையொன்று கேட்பேன்;
பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை
ஒருநா ளாகிலும் ஒருநடை யாகிலும்
உன்னினும் ஏழை ஒருவனை, உளமிரங்கி
அன்போ டக்கரை சேர்த்ததும்
உண்டோ இல்லையோ? ஓடக்காரனே!

செருப்புத் தைக்கும் சிறுதொழில் தோழனே!
வெறுப்புறு வாழ்க்கையில் வீழ்ந்து கிடக்கிறாய்
எருமைத் தோலை,நின் இருதோள் தூக்கிப்
பெருமை குன்றிடப் பேச்சும் இன்றிச்
சாக்காட்டு வாழ்க்கை வாழ்கின்றாய்; அறிவேன்!
ஈக்காட்டில் உன்குடில்; இழிவான பள்ளம்!
மலக்கூடை சுமக்குநின் மனைவியும் நீயும்
நிலக்கோள மாந்தர்க்கு நித்தமும் செய்யும்
தொண்டுக்கு வானமே தூசாய்ப் போகும்!
உண்மையோ இல்லையோ? - உனையொன்று கேட்பேன்:
பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை
ஒருநா ளாகிலும் ஒருபொழு தாகிலும்
உன்னினும் ஏழை ஒருவன் செருப்புக்கு
அன்போடு ஆணியொன் றறைந்ததும்
உண்டோ இல்லையோ? சிறுதொழில் தோழனே!

உழவு செய்கிறாய், உழவுக் காரனே!
முழவுகொல் அரசின் முழக்கமும் ஒடுக்கமும்
உன்கை எடுப்பிலும் படுப்பிலும் உருள்வது!
பெருமைதான்; என்னினும் நின்பிழைப் பெளிமையே!
பருத்தி விளைக்கிறாய்; பஞ்சுநின் ஆடை!
நெல்லைக் கொழிக்கிறாய்; நினக்கோ பழங்கூழ்!
கண்மழை பொழிந்து, கைக்கொண் உழுது
மண்ணெலாம் பொன்னாய் மலர்த்துகின் றாய்,நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/179&oldid=1444440" இலிருந்து மீள்விக்கப்பட்டது