பக்கம்:கனிச்சாறு 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 145


உலகம் புரக்கின்ற உனையொன்று கேட்பேன்:
பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை
ஒருநா ளாகிலும் ஒருவேளை யாகிலும்
உன்னினும் ஏழை ஒருவனுக்கு உளமுவந்து
அன்போடு உண்ணக் கொடுத்ததும்
உண்டோ இல்லையோ? உழவுக் காரனே!

உடை,நெய் வோனே! உடை,நெய் வோனே!
கொடையாளன் அல்லன்,நீ; உழைக்கும் குடிமகன்!
பஞ்சிழை நூற்றுக் கஞ்சி தோய்த்துப்
பாவினி லேற்றிப் பகலும் இரவும்
அற்ற இழை முடிந்தே, அறாஇழை பின்னி,
உற்றவுடை நெய்தே, ஊர்க்குஉடுக் கின்றாய்!
உண்ணவும் இன்றி உடுக்கவும் இன்றி,வே
றெண்ணமும் இன்றி இளைத்தனை; அறிகுவேன்!
பட்டுடை நெய்து பணக்காரர்க் கீவாய்;
வட்டுடை யின்றி,உன் வளைமக்கள் வாடுவர்.
உழைக்கும் பெருமகன் உனையொன்று கேட்பேன்;
பெறுவதொன்றும் இன்றி நின் பிழைப்பிடை
ஒருநா ளாகிலும் ஒருமடி யாகிலும்
உன்னினும் ஏழை ஒருவன் உடுத்திட
அன்போ(டு) ஒருமுழம் அளித்ததும்
உண்டோ இல்லையோ? உடைநெய் வோனே!

மீன்வலை யோனே! மீன்வலை யோனே!
வான்தொடு கடல்நீர் வலைபட வீசியும்,
கட்டு மரத்தொடு கட்டுண் டிருந்தும்,
அலையும் படகோ டாடி யிருந்தும்
புயலொடும், வெயிலொடும் போரிட்டு வென்றும்,
ஆழிக் களத்தே அறுவடை சாய்க்கும்
உன்றன் வாழ்வோ உழைப்பினில் பெருங்கடல்!
வென்று நீ வரும்வரை நின்று,நிலை யிருந்து,உன்
அன்றில் மகிழ்வொடு கூடை வாங்கிய
ஒப்பிலா விளைவோ ஒருமலை யிருக்கும்!
உப்புடற் காரனே! உனையொன்று கேட்பேன்.
பெறுவ தொன்றும் இன்றி,நின் பிழைப்பிடை
ஒருநா ளாகிலும் ஒருவலைக் காகிலும்
உன்னினும் ஏழை ஒருவற்கு மீன்கறி
அன்போடு எடுத்துக் கொடுத்ததும்
உண்டோ இல்லையோ? மீன்வலை யோனே!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/180&oldid=1444441" இலிருந்து மீள்விக்கப்பட்டது