பக்கம்:கனிச்சாறு 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146  கனிச்சாறு – நான்காம் தொகுதி


97

புரட்சிதான் எல்லை !


என்ன எழுதினும்
என்ன பேசினும்
ஏழைக் கொருபயன்
சேர்ந்ததா? அவன்
எரியும் சாப்பசி
தீர்ந்ததா? - செம்
பொன்னை உருக்கினோம்:
புதுமை பெருக்கினோம்;
பொதுமை மலர்ந்ததா?
இல்லையே? - பெரும்
புரட்சிதான் அதன் எல்லையே!

தென்னை காய்த்தது;
மாவும் பழுத்தது;
தெண்ணீர் வயல் பயிர்
சாய்த்தது! - நல்ல
தேட்டமும் நாள்தொறும்
வாய்த்தது இனுஞ்
சின்னஞ் சிறியவன்
பென்னம் பெரியனால்
சீரழி யும்நிலை
தொடர்ந்ததே - மனச்
செருக்குடன் கொடுந்துயர் படர்ந்ததே.

மண்மிக விளையினும்
மழைமிகப் பொழியினும்
மாற்றங்கள் கோடி
நிகழினும் - பலர்
மக்கள் தலைவராய்ப்
புகழினும் - புதுப்
பண்முழக் கெழுந்ததா?
பழமை கழன்றதா?
பசிப்பிணி தீர்ந்ததா?
இல்லையே! - மேலும்
பணிவதும் குனிவதும் தொல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/181&oldid=1444442" இலிருந்து மீள்விக்கப்பட்டது