பக்கம்:கனிச்சாறு 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  147


சட்டங்கள் தீட்டினோம்;
திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும் நிலை
வாய்ந்ததா? - பழஞ்
சாத்திரச் சகதியும்
காய்ந்ததா? - பணக்
கொட்டங்கள் எத்தனை?
கொள்கைகள் எத்தனை?
கூச்சலிட்டோம்; பயன்
இல்லையே; - ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!

-1970


98

நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி !


மலர்க்கூடை தூக்கிப் போவாள் ஒருத்தி;
மலக்கூடை தூக்கி வாழ்வாள் ஒருத்தி!
இலையெனில் ஒருத்தி இழிவைச் சுமப்பதா?
இந்நிலை ஒழிந்திடல் எந்தநாள் தம்பி?

இழுத்துச் செல்லும் வண்டியில் ஒருவன்
ஏறிப் போவான்; இழுப்பான் ஒருவன்!
புழுத்த குமுகாயப் புரையினை மண்ணில்
புதைத்திடல் என்றோ? புகலுவாய் தம்பி!

காலையி லிருந்து மாலை வரைக்கும்
கழுத்துநரம் பொடியக் கருகுவான் ஒருவன்;
வேலையொன் றின்றி விலாவரை உண்ணும்
வீணரை வீழ்த்துநாள் எந்தநாள் தம்பி?

உலகம் உண்டிட உழுவான் ஒருவன்;
உண்டு,ஊர் சுற்றி உறங்குவான் ஒருவன்!
புலையுங் கொடுமையும் புரைமிகப் புழுக்கும் மேலும்
புன்மை வழக்கினைப் பொசுக்குவாய் தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/182&oldid=1444443" இலிருந்து மீள்விக்கப்பட்டது