பக்கம்:கனிச்சாறு 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148  கனிச்சாறு – நான்காம் தொகுதி


பசியால் வாடிடும் பாட்டாளி ஒருவன்;
பசித்திட மருந்துணும் பழிமகன் ஒருவன்!
நசியா நிலையினை நசுக்குவ தென்றோ?
நாட்டை மலர்த்திட நடையிடு தம்பி!

மண்ணையுங் கல்லையும் மனத்தையும் வருத்தி
மாட மாளிகை எழுப்புவான் ஒருவன்
திண்ணையு மின்றித் தெருவில் வாழ்வதா?
தேன்,பால் பழமுண்டு வீணர் திரிவதா?

நெய்யுந் தொழில்செய் நெசவாளித் தோழன்
நீட்டிப் படுக்கக் கந்தையும் இல்லாப்
பொய்யும் புலையும் மலிந்திடும் போக்கின்
பூண்டை யறுக்குநாள் எந்தநாள் தம்பி!

நடந்து நடந்து, நலிவதா ஒருவன்?
நலமிகு ஊர்தியில் நயப்பதா ஒருவன்?
கடந்தடு போர்செயுங் காலமும் வந்தது;
களிறே புறப்படு; ஆற்றுக கடமையே!

-1970


99

பதவி எதற்கு? உதவி செய்யவா?
ஊரை உறிஞ்சவா?


படித்துத் தேறிப்
பட்டம் பெறுகிறோம்;
துடித்தலைந் தொரு தொழில்
துழாவிப் பிடிக்கின்றோம்;
அடித்துப் பிடித்தே
அதிகாரஞ் செய்கிறோம்;
கடித்து விழுகிறோம்;
கையூட்டு வாங்குவோம்;
பதவி எதற்குத் தம்பி - மக்களுக்
குதவி செய்யவா? - ஊரை உறிஞ்சவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/183&oldid=1444464" இலிருந்து மீள்விக்கப்பட்டது