பக்கம்:கனிச்சாறு 4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  கனிச்சாறு – நான்காம் தொகுதி


100

பொதுமை உலகம் புதுக்குக இளைஞனே!


அன்றைய வாழ்வில் அமைதி இருந்தது!
நன்றே செய்யும் நாட்டம் இருந்தது!
மெய்சொலல் உயர்வெனும் மேன்மை இருந்தது;
பொய்சொலல் தீதெனும் போக்கு வாழ்ந்தது,
அறியாமை இருந்தது; எனினும் கல்வி 5

நெறியே பெரிதென மக்கள் நினைத்தனர்;
வறுமை இருந்தது; எனினும் வாழ்க்கை
வெறுமை என்னும் நினைவால், விளைந்ததைப்
பங்கிட்டு உண்ணும் பழக்கம் இருந்தது!
‘ஈ’யென் றிரப்பதை இழிவாய் எண்ணினர்; 10

‘கொள்’எனக் கொடுப்பதை உயர்வாய்க் கொண்டனர்!
கலைகள் இருந்தன; கயமைகள் இல்லை;
கொலையுங் களவும் இருந்தன வாயினும்
அறமுறை, நடுநிலை - அவற்றைக் குறைத்தன.
வாணிகம் இருந்தது; வாய்மையும் இருந்ததால் 15
தூணெனத் துரும்பை அளக்கும் வழக்கிலை!
நறுஞ்செயல் யாவும் மிகுத்துநம் தமிழகம்
அறஞ்செய் உலகமாய் அன்றைக் கிருந்தது.

இப்படி இருந்த இனியநம் நாட்டில்
செப்படி வேலைகள் சிறிது சிறிதாய் 20

மிகுந்த வந்தன! மேற்கிலும் வடக்கிலும்
புகுந்தனர் மாந்தப் புல்லியர் ஒருசிலர்!
வந்தவர் தாமும் வாழ விரும்பினர்!

‘மந்திரம்’ என்றனர்; ‘மாயம்” என்றனர்;
தந்திரம் பலவும் செய்து தமிழரைக் 25

குலம்பல வாக்கினர்; புதுநெறி கூறினர்;
வலக்கா ரத்தால் வாழ முனைந்தனர்!
‘சாதி’ புகுந்தது; மிகுந்தது, சழக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/185&oldid=1444467" இலிருந்து மீள்விக்கப்பட்டது