பக்கம்:கனிச்சாறு 4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

கனிச்சாறு நான்காம் தொகுதி


16. ஏற்றத்தாழ்வு வாழ்வின் இழிநிலை விளக்கி இருள் உலகிதனை இடித்துத் தள்ளவும் நாறும் மாந்தக் குலத்தைக் கழுவவும் தமிழத் தம்பியை வீறு கொண்டெழ அழைக்கிறார் பாவலரேறு. இப்பாடலும் தமிழ்ச்சிட்டு ஆசிரியவுரைப் பாடலே.

17. கற்கவும், கற்க வேண்டுவன எவை என்பதையும் ஆழமாய் விளக்குகிறது இப்பாடல். அக் கல்வியை ‘ஓயாது தேடு மேம்படு உலகில் செம்புது வெள்ளமாய் உலகினில் பாய்வையேல் தம்பி நீதான் நாளைய தலைவன்!’ - என்று வழிகாட்டுகிறார் பாவலரேறு. இதுவும் தமிழ்ச்சிட்டு ஆசிரியவுரைப்பாடல்.

18. பொதுமை உணர்வை மிக எளிமையாய்த் தம்பிக்கு ஊட்டுகிற வகையே இப்பாடலின் அழகு. பளபளப்பான பாலியல் இதழ்கள், திக்குமுக்காட வைக்கும் திரைப்படப்பாட்டுகள், காதுகளைக் குடைந்திடும் வானொலியிசைகள் இவற்றினின்று இளைஞர்கள் எப்படித் தப்ப முடியும்? எச்சரிக்கைக் காட்டி அவர்களை வழி நடத்துகிறது இப்பாடல்.

20. விழுந்த உள்ளத்தைத் தூக்கி நிறுத்து; சாய்ந்த உடலை மேலும் வருத்து. இனிய ஊக்கக் கருத்துகள். வளர்ந்திருக்கிற அனைத்தும் 'நாகரிகப் பேயாய் உள்ளத்தைப் பிறழ வைக்கின்றன. மிகவுயர்ந்த கட்டிடமும், விளக்குத் தோரணங்களும் அகவுயர்ச்சி இல்லை; அவை உனை அழிக்கும் எல்லை - என்று தம்பிக்கு எச்சரிக்கிறார் பாவலரேறு.

22. பொத்தகம் அச்சிடுவதில் ஒரு வரைதுறை வேண்டாமா; எந்தப் பொருளைப் பற்றியும் இந்தக் காலத்தில் பொத்தகங்கள் அச்சாகிக் குவிந்து விடுகின்றன. இதனைப் பகடி செய்கிறது இப்பாடல்.

23. நல்லார் போலவே நடித்திடும் தீயவரின் போக்குகளை முழுமையாய் விளக்கி தம்பியை எச்சரிக்கைப் படுத்துகிறார் பாவலரேறு.

24. சிற்றூரின் அழகிய படப்பிடிப்பு.

25. குழந்தையைப் பற்றித் தாயின் உள்ளம் எப்படியெல்லாம் கனவு காண்கிறது! ஆசையலைகள். உள்ளத்தை மோதும் இசை வரிகள்.

26. ‘உண்மையான தொண்டன் யார்?’ என்று விளக்குகிறது.

27. ‘தமிழ்ச் சிட்டு’களைப் பாட்டெழுதச் சொல்லுகிற அதேபோது அப்பாடலின் பொருள், நிலவை எழுதவும், நீரை எழுதவும், காற்றை எழுதவும், காதலை எழுதவும் என்றில்லாமல் நாட்டை எழுதவும், நாட்டில் வாழும் மக்களின் துயரை மாற்றவும் இருத்தல் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

28. மக்கள் வாழ்க்கையை மலரச் செய்வதே தேவை. அதுவே புதுமை உலகம் என்கிறார் பாவலரேறு.

29. உயிர்வாழ்க்கை ஒரு நிலையிலேயே நின்று நுகர்ச்சி பெறுவதற்காக அன்று. துன்ப இன்பங்கள், மேடு பள்ளங்கள், இனிப்புக் கசப்புகள் போன்ற பல நிலைகளையும் உயிர் நுகர்ந்திடுதல் வேண்டும். இளைஞர்களுக்கு மிகத் தேவையான பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/19&oldid=1444660" இலிருந்து மீள்விக்கப்பட்டது