பக்கம்:கனிச்சாறு 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 கனிச்சாறு – நான்காம் தொகுதி


104

கேட்கின்றான்; கொடு !


நல்லவனோ, இல்லை
பொல்லா தவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் - மானந்
துறக்கின்றான் தம்பி
‘இல்லை’யென் னாதே;
‘தொல்லை’யென் னாதே!
இருப்பதில் ஒரு துளி எடுத்துக்கொடு இது
சரி;இது தவறெனும் ஆய்வை விடு!

குருடோ நொண்டியோ,
கூனோ கிழமோ,
கூசிடாமல் உனைக் கேட்கின்றான் - வாழ
வேட்கின்றான் - தம்பி
திருடனென் னாதே;
தீயனென் னாதே!
தேய்ந்திடா(து); இருப்பதில் சிறிதுகொடு - இது
தீது;இது சரி -எனும் ஆய்வை விடு!

நோயனோ பேயனோ
நோஞ்சானோ தடியனோ
நூறுபேர் நடுவில்கை யேந்துகின்றான் - உயிர்
காந்துகின்றான் - தம்பி
“போய் வா” என்பதும்
புகலு(ம்)உன் அறிவதும்
புன்மையென் றறிகுவாய்! கொடை பெரிது-இது
பொய்;இது மெய்-எனும் எடை சிறிது!

பொய்யனோ மெய்யனோ
போலியோ காலியோ
போக்கின்றி வந்துகை நீட்டுகின்றான்-பல்லைக்
காட்டுகின்றான்-தம்பி
வெய்ய உரைப்பதும்
வேண்டி மறைப்பதும்
விரும்பத் தகாதன; கொடை விரும்பு-பல
வீண்செல வில்இது சிறுதுரும்பு!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/191&oldid=1444475" இலிருந்து மீள்விக்கப்பட்டது