பக்கம்:கனிச்சாறு 4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 கனிச்சாறு – நான்காம் தொகுதி


106

பொதுமை உலகம் வரல் வேண்டும் !


“யார்தான் எப்படிப் போனா லென்?என்
ஏர்தான் நிலத்தை உழல் வேண்டும்-என்
பேர்தான் ஊன்றி எழல் வேண்டும்;என்
வேர்தான் உலகம் தொழல் வேண்டும்”-என்
போர்தாம் பெருகிப் படர்ந்தார், தம்பி!
பொதுமை உலகம் வரல் வேண்டும்-ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்!

“என்றன் மனைவி மக்கள் தாமே
என்றும் நலமாய் இருந்திடுக-பிறர்
தின்றால் என்ன? தேய்ந்தால் என்ன?
திசைகள் தோறும் திரிந்தென்ன?”-இவ்
வொன்றே குறியாய் உழல்வார், தம்பி!
உழைப்போர் உலகம் வரல் வேண்டும்!-ஒவ்
வொருவர் நலமும் பெறல் வேண்டும்!

“என்வீ டொன்றே இப்பெருந் தெருவில்
எடுப்பாய் நின்றே விளங்கிடுக!-பிறன்
தன்வீ டெல்லாந் தரையாய்ப் போக;
தரையும் வெடித்துக் குழிவிழுக!”-என்
றின்னே நினைப்பார் பெருகினர், தம்பி!
இனிதோர் உலகம் வரல் வேண்டும்-இங்
கெவரும் சமமாம்-எனல் வேண்டும்.

“பெய்யும் மழையென் வயலிற் பெய்க;
பிணிகள் இன்றி நான் வாழ்க;-என்
கையும் காலும் தூண்போல்-ஆகுக;
கடவு ளே,துணை துணை” யென்று-தான்
உய்யும் வழியே நினைப்பார், தம்பி
ஒருமை உலகம் வரல் வேண்டும்-பிறர்
உளர் எனும் நினைவும் பெறல் வேண்டும்.

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/193&oldid=1444478" இலிருந்து மீள்விக்கப்பட்டது