பக்கம்:கனிச்சாறு 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  163


109

ஒரு வாய்ச்சொல் கேளீர் !


வான முழுதும் அளக்கச் சென்றீர்-மற
வானவரீர்! ஒரு வாய்ச்சொல் கேளீர்-உடற்
கூனலுற்ற உழைப் பாளரினம்-உய்யக்
கூர்த்த வழியொன்றை இங்குச் செய்வீர்!-பின்னர்
கோள்களை ஆண்டிட அங்குச் செல்வீர்!

கோள்களை ஞாயிற்றை ஆய்வதனால்-ஒரு
கூலிமகன் பசி நீங்கலுண்டோ?-அட,
நீள்விளை யாடல்கள் செய்திடலாம்-வாழும்
நிலத்தை முழுதும் முன்நினைப்பீர்;-வானை
நீட்டி அளப்பதைப் பின்நினைப்பீர்!

அறிவியல் ஆய்கலை செய்வதெல்லாம்-உல(கு)
ஆண்டிடும் மாந்தர் நிலைப்பதற்கே!-ஒரு
நெறியினில் அறிவு நிலைக்கிலையேல்-உயிர்
நேர்ச்சியிலே ஒரு வீழ்ச்சியுண்டாம்!-வாழ்க்கை
நிலையினிலே ஒரு தாழ்ச்சியுண்டாம்!

பாரை நடுங்கிடச் செய்திடுவீர்-நிலப்
போர்வெறியீர்! ஒரு வாய்ச்சொல் கேளீர்-பல
பேரை உயர்த்திடும் பாட்டாளிகள் வாழ்வைப்
பேணிடும் எண்ணம் உமக்கிலையோ?-கொலை
பெய்திடும் உங்கட்(கு) உயிர்நிலையோ?

வீடுகள் இன்றிக் குளிர் மழையில்-வெட்ட
வெளியினில் மாந்தர்கள் வாழ்க்கையிலே-பெரும்
நாடு நகர்களைத் தூள்கள் செய்வீர்-பயிர்
நண்ணும் வயல்களைப் பாலை செய்வீர்-இந்த
நாற்றிசையும் சென்(று) உயிர்கள் கொய்வீர்!

போரில் அழித்திடும் செல்வத்தினால்-ஒரு
புத்தம் புதுஉல காக்கிலென்ன?-உயிர்
வேரில் புதுப்புனல் வார்ப்பதனால்-இன்ப
வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தோமா?-துன்பம்
விளைக்கும் மடமை திருத்தோமா?

வாழும் உயிர்களைக் காத்திடலாம்-இந்த
வையத்தில் நல்வளம் சேர்த்திடலாம்-நித்தம்
தாழும் ஏழைகட்குத் தோள்கொடுத்தே-உயிர்
தாங்கும் உழவரைத் தாங்கிடலாம்!-இன்பம்
தழைத்திடவே உயர்ந்த தோங்கிடலாம்!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/198&oldid=1444490" இலிருந்து மீள்விக்கப்பட்டது