பக்கம்:கனிச்சாறு 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164  கனிச்சாறு – நான்காம் தொகுதி


110

ஏழ்மையின் நிலைமை மாறியதுண்டா?


புதிய புதிய அரசுகள் வந்தன!
புதிய புதிய கொடிகள் பறந்தன!
திட்டங்கள் பற்பல தீட்டிக் குவிந்தன;
சட்டங்கள் பற்பல செய்து சாய்ந்தன;
அமைச்சர்கள் மாறி மாறி அமர்ந்தனர்!
சமைப்போம் பொதுமை எனவே சாற்றினர்!
இருந்தும் என்ன? ஏழையின் நிலைமை
மருந்துக் காகிலும் மாறிய துண்டா?

அணிகளும் மணிகளும் புதிதாய் ஆயின;
துணிகளில் வண்ணமும் எண்ணமும் மாறின;
மனைகள் புதிது புதிதாய் எழுந்தன;
மாடிகள் உயர்ந்தன? அளாவின வானை;
உணவுப் பண்டமோ ஒருநூறு வகைகள்!
ஊட்டச் சாரங்கள் குளிகையாய் உலாவின!
மயங்கு பொருள்களில் மக்களும் மயங்கினர்!
இயங்கிகள் பலவகை! எழிலும் புதுமையும்
வீட்டிலும் நாட்டிலும் விளைந்தவை கோடி!
ஏட்டிலும் எழுத்திலும் எண்ணிலும் அடங்கா!
இருந்தும் என்ன?-ஏழையின் நிலைமை
மருந்துக் காகிலும் மாறிய துண்டா?

ஊருக்கு ஊர்பல உண்டுறை விடுதிகள்!
நேருக்கு நேராய் நிலவறை ஆட்டம்!
தொழிற்கூ டங்களின் தொகைகள் கணக்கில!
எழிற்கூ டங்களின் எண்ணிக்கை மிகுதி!
இப்படி உலகம் இமைக்கிமை-நாட்குநாள்
செப்படி திறம்போல் மாறிச் செல்கையில்
ஏழையர் வாழ்க்கை எப்படித் தெரியுமா?
வாழை யடியில் வாழை வளர்ச்சிதான்!

கொடிகள் மாறின; குடிசைகள் பழம்படி!
குடிசைக் கூரைமேல் நைந்த ஓலைகள்,
பிய்ந்த பாய்கள், சணற்பைக் கிழிசல்கள்,
கரிநெய் பூசிய கருநிறத் தாள்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/199&oldid=1444493" இலிருந்து மீள்விக்கப்பட்டது