பக்கம்:கனிச்சாறு 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

க௯



30. எதையும் உயர்வாக நினை; தாழ நினைக்காதே. அரிய முயற்சிகளில் உன் உள்ளத்தைச் செலுத்து. விசும்பையளாவு, விண்ணையளந்திடு. நெஞ்சத்திற்குப் பீடு சேர்க்கிறது இப்பாட்டு.

31. பண்பாடில்லாத கல்வி பயன் தராது. விரிவடையாத செயல் யாருக்கும் உதவுவதில்லை. அறிவியல் முன்னேற்றம் மனத்தை எவ்வளவு கீழிறக்கிவிட்டது! கொஞ்ச காலத்திற்குக் கல்விச் சாலைகள் மூடியிருந்தால் என்ன? இளைஞர்கள் சூழல்களை வென்று பழகுதல் வேண்டும். புறத்தேயிருந்து அவர்கள் பெற வேண்டிய அறிவு மிகுதி.

33. கல்வியென்றால் என்ன, இக்காலத்து எவ்வாறு போலிக் கல்வியே கற்பிக்கப் பெற்று வருகிறது என்பது பற்றிய ஆழ்ந்த அறிவு விளக்கப் பாடல் இது. அன்பும் அறிவும் பண்பும் வளராத கல்வியால் மக்கட்கு ஒரு பயனும் இல்லை என்னும் கருத்து நன்கு வலியுறுத்தப் பெறுகின்றது இதில்.

34. ‘இயற்கையுள் நீ, உன்னுள் இயற்கை, உன் இயக்கம் இயற்கையோடு தொடர்புடையது. இயற்கையின் இயக்கம் உன்னுடன் தொடர்புடையது; உன்னை நீ உயர்த்திக்கொள்; உலகம் உயரும் அல்லது உலகத்தை உயர்த்தி நீ உயர்வாய்’ என்னும் அரிய கருத்துகளமைந்த இனிய பாடல்.

35. புலனடக்கப் பாட்டு.

36. ‘ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வினைசெய். கடமைக்காகவே வாழ்’ என்பது இப்பாட்டு.

37. உலகத்திற்காக நீ வாழ்வதாக எண்ணிப் பெருமைப்படாதே. முதலில் உனக்காக நீ வாழத் தெரிந்து கொள்ளல் வேண்டும். உன் உள்ளத்தை மலர்த்துவதே உன் வாழ்க்கை என்று உணர்த்துகிறது இப்பாடல்.

38. குழந்தையைப் பற்றிய உயர்ந்த வரிகள்.

39. ‘என்றன் பாட்டு’ என்றும் அழியாத பாடல்.

40. தமிழ்த்தம்பிகள் தமிழ் படிக்காமலிருக்கலாமா? தமிழ் படித்த தம்பிகள் தமிழை வளர்க்க விடும் வேண்டுகோள்.

41. ஒழுக்கம் நாம் நடக்கின்ற நடைகளில் மட்டும் இல்லை. உண்ணுவதில், உறங்குவதில், உடுப்பதில், அமருவதில், நெளிவதில், குனிவதில், நடப்பதில், படிப்பதில் முதலிய அனைத்து நிலைகளிலும் ஒழுங்கு உண்டு. நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா ? படித்துப் பாருங்கள்.

42. துன்ப உலகம் இது. இன்ப நினைவுகள் எண்ணாயிரங் கோடி. எல்லாரும் இன்பத்தையே நாடுகின்றனர். துன்பம் வரும் போது துவண்டு போகின்றனர். துன்பமின்றி இன்பம் எப்படிச் சுவைக்கும்? துன்பத்தை நாடுபவர்க்கு இன்பம் ஓடிவரும். உள்ளத்தைத் துணிவுகொள்ளும்படி இப்பாடல் ஊக்கப்படுத்துகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/20&oldid=1444662" இலிருந்து மீள்விக்கப்பட்டது