பக்கம்:கனிச்சாறு 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  165


நரிப்புழை போலக் குடிசையின் நுழைமுகம்!
புதைகுழி போலக் குடிசையின் உட்புறம்!
கதைப்பட நடிக நடிகையர், விலங்குகள்,
உரிமை முழக்கிய உலகத் தலைவர்கள்
பெருமை பேசிடும் கட்சிப் பெம்மான்கள்-
வெட்டுப் படங்களை ஒட்டிய சுவர்கள்!

தட்டு முட்டுகள்! கந்தை கழிசல்கள்!
சப்பை சுவடுகள்! சதவல் சகதிகள்;
குப்பை கூளங்கள்! குண்டுகள் குழிகள்!
குக்கல் கோழிகள்! குடும்பொடு பன்றிகள்!
அடிகள், உதைகள், அவிழ்ந்த பேச்சுகள்,
குடி,கூத் தாட்டம், குத்து வெட்டுகள்!

இப்படி இங்கோர் உலகம் இருப்பதை
முப்படியாக முன்னேறிச் செல்லும்
நாக ரிகந்தோய் உலகம் நம்புமா?
வேகமும் புதுமையும் விளைப்போர் விளக்குக!

-1972


111

ஒருநாள் வரத்தான் போகிறது !


ஓங்கிக் கட்டிய உயர்ந்த மாளிகை!
உலாவக் கட்டிய மேற்புற மாடிகள்!
தூங்கக் கட்டிய தனிநிலை அறைகள்;
தொங்கு மாடங்கள்; ஊஞ்சல் தூலிகை!
தாங்கிய விளக்குகள்! பலகணித் திரைகள்!
தரையெலாம் விரிப்புகள்! பல்வண்ண ஓவம்!
பாங்காய் இவற்றுளே குபுகுபு குபு-வெனப்
பாட்டாளி மக்கள் புகுகின்றார் பாருங்கள்!
ஓங்கிய செல்வரே, உணருங்கள்! அப்படி
ஒருநாள் வரத்தான் போகிறது-இவ்
வுலகம் பொதுவென ஆகிறது! 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/200&oldid=1444495" இலிருந்து மீள்விக்கப்பட்டது