பக்கம்:கனிச்சாறு 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166  கனிச்சாறு – நான்காம் தொகுதி


பூவகை வகையாய் மலர்ந்த பூங்கா;
புதுபுதுப் பழவகை; காய்கறி விளைச்சல்!
தூவுநீர் வாவிகள்; செதுக்கிய சிலைகள்;
தொலையாப் புல்வெளி; பரந்த தோட்டம்!
தாவுமான் குட்டிகள்; ஊடாடு மயில்கள்!
தங்கி வாழ்வரோ இரண்டொரு பேர்கள்!
மேவும்-இவற்றுளே திபுதிபு திபு-வென
மெலிகின்ற ஏழைகள் புகுகின்றார் பாருங்கள்!
ஓ!ஓ! செல்வரே, எண்ணுங்கள்! அப்படி
ஒருநாள் வரத்தான் போகிறது-இவ்
வுலகம் பொதுவென ஆகிறது! 2

இழைப்பாய் இழைத்துப் பூசிய சுவர்களை
எழுப்பிக் கொடுத்து மாளிகை சமைத்திட
உழைப்பாய் உழைத்தவர்-பிறந்த மேனியர்-
உறங்குவர் பாதையில்! உங்கட்கு அடடா,
அழைப்புக் கெடுபிடி ஆயிரம் ஆட்கள்!
ஆட்ட மயில்களைப் போல்பல பெண்டிர்!
அழைப்பின்றி, இவற்றுளே திமுதிமு திமு-வென
அங்காந்த மக்கள் புகுகின்றார் பாருங்கள்!
உழைப்பிலாச் செல்வரே, ஓருங்கள்! அப்படி
ஒருநாள் வரத்தான் போகிறது-இவ்
வுலகம் பொதுவென ஆகிறது! 3

தின்று தின்று தெவிட்டுநெய் உணவு;
தீரப் பிழிந்த தீம்பழச் சாறு;
அன்றை அன்றை புதியபட் டாடை;
ஆடிக் களித்திடக் கலைக்களி யாட்டம்;
சென்றுலா மீண்டிட மெத்தென் ஊர்திகள்!
செருக்குச் சிரிப்புகள்; எக்காளப் பேச்சு;
நன்றுநன் றிவற்றுளே திடுதிடு திடு-வென
நலிகின்ற ஏழைகள் புகுகின்றார் பாருங்கள்!
ஒன்றாத செல்வரே, நினையுங்கள்! அப்படி
ஒருநாள் வரத்தான் போகிறது-இவ்
வுலகம் பொதுவென ஆகிறது! 4

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/201&oldid=1444496" இலிருந்து மீள்விக்கப்பட்டது