பக்கம்:கனிச்சாறு 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  169


113

வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது !


என்றும் நினைத்திரு;
இந்நிலம் பெரிது!
குன்றமும் வானும்
கோடி ஆண்டுகள்
நின்று நிலைப்பன!
நீயோ அழிபவன்!
என்றும் இருப்பதாய்
இறுமாந்து விடாதே! 1

ஒருநாள் நம்முடல்
உலகினில் அழியும்!
திருநாள் போலத்
திரிந்த வாழ்வெலாம்
இருளுள் மூழ்கும்;
இல்லாமற் போவோம்!
அருமை உறவினர்
அழ அழ அழிவோம்! 2

பிறப்பனஎல்லாம்
பின்னொரு நாளில்
இறப்பதும் உறுதி!-
இதுவே இயற்கை!
மறப்பிலா இந்நிலை
மனத்தினுள் இறுத்திச்
சிறப்புற எண்ணவும்
செய்யவும் முனைக! 3

உன்புது வாழ்வை
உவப்புடன் நடத்து!
அன்பும் அறமுமே
அனைத்தினும் உயர்வாம்!
இன்பம் வருகையில்
எக்களிப் புறாதே!
துன்புற நேரினும்
துவண்டு விடாதே! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/204&oldid=1444508" இலிருந்து மீள்விக்கப்பட்டது