பக்கம்:கனிச்சாறு 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170  கனிச்சாறு – நான்காம் தொகுதி


ஒருநலம் பெறுகையில்
உலக நலம் நினை!
வருநலம் யாவும்
வகுத்துண்டு வாழ்வாய்!
பெருநிலம், விளைவுகள்,
பிறவெலாம் பொதுவே!
மருவிலா உள்ளமும்
வாழ்வுமே மகிழ்ச்சி! 5

வாழ்நாள் சிறியது;
வாழ்க்கையோ பெரிது!
வீழ்நாள் வரினும்
வீழாது நற்செயல்!
தாழ்வும் உயர்வும்
தம்தம் செயல்களே!
சூழ்வன மீறிச்
சுடர்வன செய்வாய்! 6

-1973


114

ஏழையை உயர்த்திடப் பாடுவாய் !


ஏடெடுக் கின்றாய்; தூவலை யெடுத்தாய்!
எந்தப் பாடலை எழுதிட நினைத்தாய்?
காடுடுக் கின்றவோர் இன்னிள வேனிலின்
காட்சியை யா? நறுங் கார்தரு மாட்சியா?
கோடுடுக் கின்றபூந் துணரின தழகையா?
கூடிடப் பாடிடுங் குயில்களின் இசையையா?
ஓடெடுக் கின்றஓர் ஏழையைப்-பாவல,
உயர்த்து கின்றநற் பாடலைப் பாடுவாய்! 1

ஊரெலாம் உறங்கையில் உன்விழி உறங்கா
துயிர்க்குங் கற்பனை உலுக்கிட எழுந்தாய்!
யாரெலாம் நினைந்து பாடிட முனைந்தாய்?
யாழையும் மயிலையும் பழித்தவள் அழகையா?
பாரெலாந் திரிந்துன் நினைவுப் பறவையும்
பார்த்து மகிழ்ந்திடும் எழிலையா வரைந்தாய்?
நீரிலாப் பயிரெனும் ஏழையைப்-பாவல,
நிமிர்த்தி உயர்த்திடும் பாடலைப் பாடுவாய்! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/205&oldid=1444507" இலிருந்து மீள்விக்கப்பட்டது