பக்கம்:கனிச்சாறு 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௦

கனிச்சாறு நான்காம் தொகுதி


43. அச்சு ஏந்துகள் வந்த பின்னால் குப்பை கூளங்களும் அச்சாகி நூல்கள் எனும் பெயரில் உலாவருகின்றன. உண்மை ஒடுங்கிக் கிடக்கின்றபொழுது பொய் தலைவிரித்தாடுகிறது. காலம் செய்யும் கோலங்களில் ஏமாறிப் போகவேண்டா என இளைஞர்களை எச்சரிக்கிறது இப்பாட்டு.

44. தோற்றம் ஒன்று, செயல் ஒன்றாகக் கிடக்கும் இவ்வுலகத்தை விளக்குகிறது.

45. கணியக் குறிப்பினை நம்பும் மூடத்தனத்தை எளிய கதைவடியில் விளக்குகிறது இப்பாடல். இப்பாடல் மிசாக் கொடுஞ் சிறையில் பாவலரேறு இருக்கையில் 28,4,76 இல் எழுதியது.

46. சிவனிய, திருமால் மதப்பற்று பற்றிக் கூறப்பெறும் கதையை நகைப்புடன் சொல்லுகிறது இப்பாடல். அறிவியல் அல்லாமல் மூட நம்பிக்கையில் ஆட்படும் இக் குமுகப்படப் பிடிப்பு இக்கதை. இப்பாடலும் பாவலரேறு அவர்கள் 'மிசா'க்கொடுஞ்சிறையில் இருக்கையில் 30,4,76இல் எழுதியது.

47. இளைஞர் ஒவ்வொருவரையும் இந்த நாடு நம்பிக்கிடக்கின்றது என்று வலியுறுத்துகிறார் பாவலரேறு.

48. குறைகள் எல்லாரிடமும் உள்ளன. ஆனால் அவை உள்ளவரிடம் நன்மை ஏதோ ஒன்றிரண்டு இருக்கலாமன்றோ? அவற்றிற்காக அவரைப் பாராட்டும் பழக்கத்தைக் கொண்டுவிட்டால் புன்மைகள் தாமே அழிந்து போகும். புற அழகுகளை மிகுத்துக் கொண்டுள்ளோம். அகம் அழகற்றுக் கிடக்கின்றது. அகவொளி பெற்றாலன்றோ புறமும் ஒளிர்ந்து தோன்றும்? அகம் இருண்டால் புறத்தும் இருளே.

50. இளமையில் நேராக நடப்பவன் முதுமையில் குனிந்து நடக்க வேண்டுவதில்லை. இளமை காத்துக் கொள்ளப்பட வேண்டும். இழிவான நடைமுறை நாகரிகமாகாது.

51. ‘சுற்றியிருக்கும் சூழல்களுக்கு மனமும் அறிவும் உணர்வும் நெகிழாமல் உறுதியைக் கடைப்பிடி’ என்பது இப்பாடல். அழகு செய்வதிலும் ஓர் ஒழுங்குண்டு. அது தவறினால் அருவருப்பாகிவிடும்.

52. உனக்குப் பொருந்தாத ஆசைகளில் ஈடுபட்டு உன் வாழ்வைக் கனவாக்கிக் கொள்ளாதே. பொருந்தியதை எண்ணு. பொருந்தியதைச் செய் என்று புகல்கிறது.

53. ‘எட்டாத ஒன்றில் மனம் எம்பிப் பாயும்; கிட்ட இருப்பதை விளங்கிக் கொள்; வினைபடு.’ எனப் புகல்கிறது இப்பாடல்.

54. எந்த எழுச்சிக்கும் எதிர்த்தாக்குதலுண்டு. அதற்காக இடிந்து போகலாமா? கூடாது என்று உள்ளத்தை ஊக்குகிறது.

55. நம் காலத்திற்குத் தேவையான உண்மைத் தொண்டை இளைஞர்கட்கு விளக்குகிறது இப்பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/21&oldid=1444663" இலிருந்து மீள்விக்கப்பட்டது