பக்கம்:கனிச்சாறு 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  175


117

உலகுக்கு உழைப்பவரே, என் உண்மைத் தெய்வம்!


ஒருதுணை யின்றி,
உறுபொரு ளின்றி,
உலகினுக் குழைப்பவர் எவரோ-ஓர்
உண்மை வினையினர் எவரோ-அவர்
ஊரெது வெனினும்,
பேரெது வெனினும்
உறவினர் அவரே எமக்கு!-அவர்
ஒளிதரும் அருங்சுடர் விளக்கு!

தனிநலம் இன்றித்
தளர்வெதும் இன்றித்
தமிழ்மொழிக் குழைப்பவர் எவரோ-அதைத்
தாயென மதிப்பவர் எவரோ-அவர்
தகுதிஎன் னெனினும்
தரம்எது வெனினும்
தம்பியும் அண்ணணும் அவரே!-அவர்
தங்கிட நான்ஒரு சுவரே!

தூக்கமும் இன்றித்
துயர்உணர் வின்றித்
தொண்டராய் அலைபவர் எவரோ-மனந்
துவளா உரத்தினர் எவரோ-அவர்
தொடர்பிலர் எனினும்
தொலைவினர் எனினும்
தோள்களில் சுமந்திட வருவேன்!-அவர்
தூங்கவும் என்மடி தருவேன்!

மனைவியை மறந்து,
மக்களைத் துறந்து,
மன்பதைக் குழைப்பவர் எவரோ-தமிழ்
மக்களைக் காப்பவர் எவரோ-அவர்
மதித்திலர் எனினும்
மகிழ்ந்திலர் எனினும்
மலர்களை அவர்அடிக் கிடுவேன்!-அவர்
மனம்நினைந் திராப்பகல் தொழுவேன்!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/210&oldid=1444515" இலிருந்து மீள்விக்கப்பட்டது