பக்கம்:கனிச்சாறு 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176  கனிச்சாறு – நான்காம் தொகுதி


118

உழைப்பை அவமதிக்கும் செயல் !


உழைப்பதிகம் காண்கின்ற முன்னேற்ற நாடுகளில்
பருவமழை உதவா விட்டால்,
தழைப்பதிகம் காண்கின்றார் அறிவியலால்! விளைவங்கே
முப்பொழுதும் தளிர்க்கச் செய்வார்!
பிழைப்பதிகம் இல்லாத வறுமைமிகும் இந்நாட்டில்
புனிதமெனும் பெருமை பேசி
மழைப்பதிகம் பாடுகின்றார்! மந்திரத்தை ஓதுகின்றார்!
உழைப்பைஅவ மதிக்கின் றாரே!

குடுமியெலாம் ஒன்றிணைந்து நீர்புகுந்து குளத்தவளை
போல்வேதக் கூச்ச லிட்டால்,
கிடுகிடென மழைபொழியும் எனநினைத்து வான்நோக்கும்
முழுமூடக் கீழ்மை யோரே,
அடுமழைதான் பொழிந்தாலும்
விளைந்தாலும் செல்வர்களால்
ஏழையர்க்கிங் காவ தென்ன?
‘படுமின்’என இயற்கையதே
நெறிபிறழ்ந்த நும்போக்கை
மழைகரந்து பழித்தல் கண்டீர்!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/211&oldid=1444516" இலிருந்து மீள்விக்கப்பட்டது