பக்கம்:கனிச்சாறு 4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  181


122

மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே !


பொய்யர்கள் புளுகர்கள் பொல்லாக் கயவர்கள்
பொழுதெலாம் தந்நலம் கருதும் பேயர்கள்
மெய்யர்கள் போலவே உலாவரு கின்றனர்;
மேலுக் குழைப்பதாய் உரையளக் கின்றனர்!
வெய்ய உழைப்பினில் மேனித் தசைகளை
விளர்ந்துள நாடி நரம்புமண் டிலங்களை
நெய்யாய் உருக்கி உழைக்கும் மக்களோ
நித்தமும் செத்துப் புதைகின்றார் நாட்டிலே!

பிழைக்கவும் வழியிலை; பேசவும் பொழுதிலை!
பின்னும் இருப்பதால் யார்க்கும் பயனிலை!
உழைக்கும் மக்களும் உழவரும் தொழிலரும்
ஒன்றிணைந் தெழுந்திடில் உண்மை சாகுமோ?
அழைக்கும் விடுதலை ஆர்ப்பரிப் பெழுந்தது!
அனைவரும் ஒன்றெனும் நாளும் கிளர்ந்தது!
மழைக்கும் வெயிற்கும் மலைத்தது போதும்!
மக்களின் வெள்ளம் கடலெனத் திரள்கவே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/216&oldid=1444527" இலிருந்து மீள்விக்கப்பட்டது