பக்கம்:கனிச்சாறு 4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  185


கோணலாய் மாணலாய்க்
குப்பையில் இடல்போல்
வீணாய்ப் பண்ணியே
வீழ்வதும் சரியோ?

எண்ணிப் பார்ப்பாய்!
எண்ணிப் பார்ப்பாய்!
மண்ணில் நிலைபெற
எண்ணிப் பார்ப்பாய்!

-1987


126  ஆடுக ஊஞ்சல்!

வானவெளிப் பரப்பினிலே
வளையவரும் உலகம்!
வளையவரும் உலகத்தில்
வாழ்ந்திருக்கும் உயிர்கள்!
வாழ்ந்திருக்கும் உயிர்களிலே
வளர்ந்த உயிர் மக்கள்!
வளர்ந்த உயிர் மக்களிலே
வந்து பிறந் தோம், நாம்!

வந்துயிர்த்த பெருமையெண்ணி ஆடுக ஊஞ்சல்!
வானவெளிக் காற்றினிலே ஆடுக ஊஞ்சல்!


பேரறிவின் உயிர்க்குலத்தில்
பிறந்துவிட்டோம் நாமும்!
பிறந்துவிட்ட பெருமையொன்றே
பேசிடப் போ தாது!
பேசிடத்தான் வேண்டுமெனில்
பெரும் புகழும் வேண்டும்!
பெரும் புகழைப் பெறுவதென்னில்
பெருஞ்செயலும் செய்வோம்!

பெருஞ்செயலைச் செய்யவெண்ணி ஆடுக ஊஞ்சல்!
பேரண்ட வீதியிலே ஆடுக ஊஞ்சல்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/220&oldid=1444535" இலிருந்து மீள்விக்கப்பட்டது