பக்கம்:கனிச்சாறு 4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186  கனிச்சாறு – நான்காம் தொகுதி


127

அறம், பொருள், இன்பம் !


ஒவ்வொரு நொடியும்
உன்னையே, நம்பு!
ஒவ்வோர் அடியும்
உறுதியாய் எடுத்துவை!
எவ்வோர் அசைவும்,
எண்ணியே இயங்கு!
செவ்வையாய் எண்ணினால்
செயல்கள் செவ்வையாம்!

வயிற்றுத் தசையினை
வளர்த்திடும் நோக்கில்
பயிற்றிக் கொள்வது
பழிப்புறும் வாழ்க்கை!
முயற்றி உன்றன்
முழுத்திறம் காட்டி
வியற்றகு மாறு
விளங்குக தம்பி!

அரசுப் பதவியை
அண்டிப் பிழைத்திட
உரசித் திரிந்தே
உதவிகேட் காதே!
முரசதிர் வதுபோல்
அறிவினை முழக்கு!
சரசர வென்றே
சடுதிமுன் னேறுவாய்!

உடலும் அறிவும்
உள்ளமும் என்றும்
திடமுடன் ஒளிபெற
தேர்ந்த பயிற்சிசெய்!
கெடவிடில் உடன்அவை
கீழ்மையை நாடும்!
மடமையே மேல், அவை,
மாண்புஇழத் தற்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/221&oldid=1444536" இலிருந்து மீள்விக்கப்பட்டது