பக்கம்:கனிச்சாறு 4.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  189


130

சுற்றுச்சூழலை வெற்றி கொள்வாய் !


சுற்றுச் சூழலை வெற்றி கொள்பவர்
சிந்தனை மிக்கவர்; துணிந்தவர்! -தம்
வெற்றுணர் வாலே அதற்கே அஞ்சுவார்
வெற்றியை அடையார்; பணிந்தவர்!

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையால்
உலகின் இயற்கை இருப்பதில்லை! -அது
வெவ்வே றாகப் பொதுவென அமையும்!
வேடிக்கை காட்டும்; வெறுப்பதில்லை!

நமக்கோர் உணர்வும் நமக்கோர் அறிவும்
நாட்டமும் இருக்கும்! மயங்காதே! - அதில்
உமக்கெது விருப்பம் உமக்கென்ன போக்கென்(று)
உற்றுணர்ந்(து) இயங்குவாய்! தயங்காதே!

அனைவர்க்கும் ஆனவை அனைத்தும் உள்ளன!
அவரவர் தேவையே உருவாக்கம்! -நம்
வினைத்திறம் மனத்திறம் சூழ்வுத் திறங்களால்
விளைவித் திடுவதே அறிவூக்கம்!

-1988


131

பொருளை விரும்பிப் புன்மை செய்யாதே!


நடைமுறை உலகம் எவ்வா றிருப்பினும்
நல்லன வற் கடைப்பிடி.
முடைநாற் றத்தை எவருமே விரும்பார்!
முல்லையை விரும்பார் எவரே?

பொய்யும் பொறாமையும் நெஞ்சைநஞ் சாக்கும்!
புன்மையை உளத்தினில் வளர்க்கும்!
மெய்யும் அன்புமே உளத்தைமேம் படுத்தும்!
மேன்மைக் குணங்களை விதைக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/224&oldid=1444539" இலிருந்து மீள்விக்கப்பட்டது