பக்கம்:கனிச்சாறு 4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192  கனிச்சாறு – நான்காம் தொகுதி


134

பொதுவுடைமை !


ஒற்றுமை என்பதோ
உளத்தால் இணைவது!
உடல்கள் திரள்வதோ ஒரு கூட்டம்!
வெற்றுரை முழக்கால்
வேற்றுமை போம் - எனல்
வேடிக்கைக் கனவு நடப்பதில்லை!

அன்புணர் வால்தான்
அகலும் வேற்றுமை!
அதுவும் பொருளால் பிளவுபடும்!
இன்பமும் துன்பமும்
மக்களைப் பிரிக்கும்!
எனவே சமநிலை வலிவுபெறும்!

உழைப்பில் லாமல்
உணவில் லாமல்-
ஒருவரும் இருத்தல் கூடாது!
பிழைப்பெல் லார்க்கும்
பொதுவென இருந்தால்
பிழையே எதனிலும் நேராது!

அனைவர்க்கும் உழைப்பு;
அனைவர்க்கும் உணவு;
அனைவர்க்கும் பொதுவாம் வாழ்வுடைமை!
அனைவர்க்கும் ஓய்வு:
அனைவர்க்கும் மகிழ்வு;
அவையே மார்க்சியப் பொதுவுடைமை!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/227&oldid=1444542" இலிருந்து மீள்விக்கப்பட்டது