பக்கம்:கனிச்சாறு 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196  கனிச்சாறு – நான்காம் தொகுதி


இவைதாம் இன்றைய உலகம்!
இருப்பினும் சோர்வடை யாதே!
எவை உயர் வானவை எண்ணிவா!
எல்லா நிலையிலும் உயர்வடை!

கரடுமுரு டான மலையிலும்
காவளம் கனிவளம் காணலாம்!
திருடரும் மாந்தரே! என்னினும்
மாந்தர் அனைவரும் திருடரா?

-1990


139

மடிவதோ இன்னமும்?
உரிமை முழக்கடா!


அறிவுறு நலன்களும் தேவை யில்லை-தம்பி
அன்பதும் தேவை யில்லை!
செறிவுறு பண்புகள் தேவை யில்லை-நல்ல
சிந்தனை தேவை யில்லை!
நறுவுணர் வெல்லாமும் அடிமைப் படிகளே!-நாளும்
நாளுமே உனைக்கீழ் இறக்கும்!
பெறுவது தமிழருக்(கு) உரிமை ஒன்றே!-அதைப்
பெறும் போதே அவைதாமும் சிறக்கும்!

அடிமைக்கோ அறிவென்ப தெதிரிக்கு ஆக்கம்-தம்பி
அன்பாக நடப்பதும் தேக்கம்!
மிடிமையர்க் கெதற்குப்பண் பாடுகள் எல்லாம்?-தம்பி
மேலும் மேலும் அவை தாக்கம்!
விடிவதற் குள்ளே, நீ எழுந்திடல் வேண்டும்!-தம்பி
விடியலுன் துயரினைப் போக்கும்!
மடிவதோ இன்னமும்? உரிமை முழக்கடா!-இனி
வருங்காலம் உனதுதான் நோக்கம்!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/231&oldid=1444550" இலிருந்து மீள்விக்கப்பட்டது