பக்கம்:கனிச்சாறு 4.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198  கனிச்சாறு - நான்காம் தொகுதி


141

எவற்றினிலும் நேற்றைவிட
இன்றுயர்தல் வாழ்க்கை !


ஓடுநடை, பரபரப்பு,
ஓலங்கள், இரைச்சல்,
தேடுபொருள் நோக்கம்-என்றே
திரிந்தலைதல் வாழ்வா?

அன்புசெய்தல், அறிவுபெறல்,
ஆழ்ந்து அகலக் கற்றல்,
தின்பதிலும் முறை ஒழுகல்,
தெளிவுபெறல்-வாழ்க்கை!

எண்ணியெண்ணிச் செயப்பழகல்,
இயற்கையிலே தோய்தல்,
பண்ணுவதில் செப்பநுட்பம்
பயன்கருதல்-வாழ்க்கை!

பெற்றநலம் பிறர்க்காக்கல்,
பிறர்நலத்துக் குழைத்தல்,
கற்றவற்றை மற்றவர்க்கும்
கனிந்துதரல்-வாழ்க்கை!

தவற்றினிலும் திருத்தமுறல்,
தாழ்ச்சியின்றி நிற்றல்,
எவற்றினிலும் நேற்றைவிட
இன்றுயர்தல்-வாழ்க்கை!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/233&oldid=1444552" இலிருந்து மீள்விக்கப்பட்டது