பக்கம்:கனிச்சாறு 4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  201


140

தன்னலம் கருதாத தம்பி, நீ !


எங்குமே எதிலுமே எவருமே இழிஞராய்
இருக்கின்றார் எனில், உளம் சோராதே!-எதும்
தங்கமாய் இருந்திடில் தனிமதிப் பதற்குண்டோ?
தனியன், நீ! பிறர் நிலை பாராதே!

உண்பதில் உடுப்பதில் உடலின்பம் துய்ப்பதில்
உலகினர் யாவரும் ஒன்றுதான்!-உன்
கண்பொது, வாய்பொது, செவிபொது-எனநலம்
கருதினால் உனக்கது நன்றுதான்!

உன்நலன் பொதுநலன்; உன்நடை புதுநடை;
உன்பயன் யாவர்க்கும்-என்றுசொல்-ஒரு
தன்னலம் கருதாத தம்பி, நீ என்பதே
தகுதிசேர் உரையென நின்று சொல்!

-1992


145

துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன !


பொய்யான செயல்கள்,
புளுகிடும் உரைகள்
பொருளுக்கே அலைந்திடும் நெஞ்சுகள்,

மெய்யேதும் இல்லாத
மேனி மினுக்குகள்,
மேன்மையாம் இவையெனப் பேச்சுகள்,

வெய்யவாம் கொடுமைகள்
மேன்மேலும் வளர்ந்தன!
மேலோட்ட வாழ்க்கையே போதுமாம்!

தொய்யவும் வேண்டா;
துவளவும் வேண்டா;
துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/236&oldid=1444555" இலிருந்து மீள்விக்கப்பட்டது