பக்கம்:கனிச்சாறு 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 கனிச்சாறு – நான்காம் தொகுதி


தூங்குபவர் தூங்கட்டும்; துலங்குபவர்
துலங்கட்டும்; தொளைகள் எண்ணி
வீங்குபவர் வீங்கட்டும்; விக்குபவர்
விக்கட்டும்; விளைவைக் கண்டே
ஏங்குபவர் ஏங்கட்டும்; எந்தமிழர்
நலங்காண இருகை ஏந்தித்
தாங்குபவர் தாங்கட்டும்! தயங்க, இனி
நேரமில்லை; தாவு வீரே!

இருப்பவர்கள் இருக்கட்டும்; இணைபவர்கள்
இணையட்டும்; இன்றும் நேற்றும்
தெருப்படியில் அமர்ந்தபடி படிப்படியாய்
நமையளந்து தேறிப் பார்த்தே,
உருப்படியாய் ஒருபடியும் அளக்காதார்
உட்கார்ந்தே வான்பார்க் கட்டும்!
நெருப்படியும் குளப்படியும் நீள்வினையார்க்
கொருபடியென் றிணைவீர் வந்தே!

நெடுங்காலம் உழைத்திட்டோம்! நின்றவரார்?
படுத்தவரார்? நிலையா வாழ்க்கை?
அடுங்காலம் வந்திடுமுன் பெருங்கொள்கை
சிறுமுயற்சி - ஆற்றல் வேண்டும்!
கெடுங்காலம் பற்றியவர் கீழ்நினைப்பர்;
நாமவரைக் கிளற வேண்டா!
நடுங்காத நாவினராய் நலஞ்செய்வோம்,
மொழி, இனத்தை - நாட்டைக் காத்தே!

1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/249&oldid=1444630" இலிருந்து மீள்விக்கப்பட்டது