பக்கம்:கனிச்சாறு 4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  219


159

அதுதான் எனக்குத் திருநாள்!


(எடுப்பு)


அதுதான் எனக்குத் திருநாள்!
அதுவன்றிப் பிற யாவும் மனம்நோகும் வெறுநாள்!

(அதுதான்)


(தொடுப்பு)


எதுநாளில் தமிழர்கள் வாழ்வுரிமை கொண்டோராய்
எந்தமிழ்த்தேன் மொழிபேணி, இனம்பேணி இருப்பாரோ

(அதுதான்)


(முடிப்பு)


புதுஆடை நெய்ப்பொங்கல் பண்ணியம் பலகாரம்
பூமாலை நறும்படையல் இவற்றிலென்ன சாரம்?
சிதையாமல் தமிழ்மானம் இனமானம் பேணும்
செழிப்புற்ற மறுமலர்ச்சி இருவிழிகள் காணும்

(அதுதான்)


உலகெங்கும் சிதர்ந்தோடி உயிர்நைந்து வாடும்
உவப்பில்லா நிலைமாறிச் செந்தமிழர் கூடும்
நிலமெங்கள் நிலமென்ற தன்னுரிமை யோடும்
நிகழ்த்துகின்ற விழவன்றோ மகிழ்ச்சிப்பண்பாடும்

(அதுதான்)


அறவியலைச் சாராத அறிவியல்முன் னேற்றம்
ஆருக்குப் பயன்நல்கும்? வெறும் பொய்ம்மைத் தோற்றம்!
திறமிலராய்க் கரவுளமும் காரறிவும் கொண்டே
தித்திரிப்பாய் வாழும்நிலை ஒழிந்திடுநாள் என்றோ!

(அதுதான்)


காதிரைச்சல் தூளிபடும் ஒலிபெருக்கிக் கத்தல்,
கலைக்கூத்தர் அரித்தெடுக்கும் மனத்தில்விழும் பொத்தல்,
ஊதிரைச்சல் வண்டியுலா - இவைஇல்லாப் பெருநாள்
உளம் அமைதி கொள்ளும்படி வாய்த்திடுமே ஒருநாள்!
(அதுதான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/254&oldid=1444637" இலிருந்து மீள்விக்கப்பட்டது