பக்கம்:கனிச்சாறு 4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன்
உன்னைத் திருத்தடா தமிழா–நீ
உன்னைத் திருத்தடா தமிழா!

பாரைத் திருத்திடல் நல்ல முயற்சியே!
பாட்டனும் பூட்டனும் செய்த பயிற்சியே!
யாரைத் திருத்தினர்; யாது வளர்ச்சியே?
யாங்கணும் யாங்கணும் வாழ்க்கை தளர்ச்சியே!

வேரைத் திருத்துதல் பயனளித் திடலாம்!
வினையத் திருத்திடும் முயற்சியோ கடலாம்!
கூரை திருத்தினால் நிற்குமோ சுவரே?
குழியைத் திருத்தாமல் இருப்பது தவறே!

உலகைத் திருத்திட வலம்வரு கின்றாய்!
உன்னைத் திருத்தெனில் உள்ளம்நோ கின்றாய்!
அலகிலா முயற்சிகள் அறங்கள், சட்டங்கள்
ஆரைத் திருத்தின? பணயம்கட் டுங்கள்!

ஆயிரம் ஆண்டுக்கு முன்னும் இருந்தனர்;
அம்மண மாகவே உண்டு திரிந்தனர்;
ஏயின திருத்தங்கள் என்னென்ன கண்டாய்?
எழிலுடை! தலைமயிர்! மற்றென்ன விண்டாய்?

வெள்ளுடை மேனியில் புரள்வதோ நேர்மை?
விரிமயிர் வாரி முடித்தலோ சீர்மை?
உள்ளத்துள் கள்ளமும் கரவும் கிடப்பதா?
ஊரினை ஏமாற்றி, மறைந்தே நடப்பதா?

பொதுமையைக் காணாத உளம்என்ன உளமோ?
பூசலை விளைத்திடும் வளம்என்ன வளமோ?
புதுமைஎன் றுரைப்பது செல்வர்க்குச் செழிப்பு!
போக்கற்ற ஏழையர்க் கேதுஅதால் விழிப்பு?

மன்றங்கள் எத்தனை? எத்தனைக் கோயில்?
மடிபவர் எத்தனைப் பேர் தீமை நோயில்?
இன்றைக்கும் நேற்றைக்கும் வேற்றுமை யாது?
இழிவினை, அழகினால் மூடல்அன் றேது?

கல்வியும் செல்வமும் ஓங்குதல் மேலோ?
கணக்கிலா இழிவுகள் குவிதல்எப் பாலோ?
சொல்,வினை உளத்தோடு பொருந்துதல் வாழ்வே!
சொக்கட்டான் காய்போல் உருளுதல் தாழ்வே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/263&oldid=1444657" இலிருந்து மீள்விக்கப்பட்டது