பக்கம்:கனிச்சாறு 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6  கனிச்சாறு – நான்காம் தொகுதி


6  கோழையின் தாய் !

(நகை)
(உரைப்பா நடை
)

இவனைப் பெற்றுக் காத்ததற்கு ஏதோவொரு
குவளையைப் பெற்றிருந் தாலும் குடிக்க உதவும்!

பிள்ளையென்றிவனைப் பெற்றேன்! பெரிதும் மகிழ்ந்தேன்.
நொள்ளையோ நொண்டியோ என்றிலா துவந்தேன்.

அட,அட இப்படி ஆவான் என்றிருந்தால்,
குடர் சரிந்து வயிறுவீங்கிக் குந்தி யிருந்தானே...

அப்போதே விட்டிருப்பேன், அழுதகண் ணீரோடும்
முப்போதும் மூக்கைச் சிந்திப் போட்ட கையோடும்.

வாய்த்தது இப்படியா வாய்க்க வேண்டும்!
காய்த்தது என்றிருக்கக் கசப்பையா காத்தேன்?

இவன்மேல் குற்றம் எதுவும் இல்லை.
அவனை வளர்த்த அப்பனே பொறுப்பு!

எலிவந்தால் என்னைவந் தெழுப்பிப் பூனைக்குக்
‘கிலி’பிடித்து, நாய்க்குக் காதம் ஓடி,
மாடு கொம்பசைத்தால் மரமேறி விழுகும்
கூடு, வெறுங்கூடு, எனக்குவந்த கோமகன்!

இவனைச் சொல்லி என்னபயன்? நேற்று;
தவலைக்குள் புகுந்த எலியைப் பூனைவிரட்டத்
திருடன் திருடன் என்று தகப்பன் கூச்சலிடக்
குருடன் போல, விளக்கிலாக் கும்மிருட்டில்
மூலையில் பதுங்கிய முக்காட்டை நீக்கி
ஆளைப் பார்க்கையில் அழகே உருவாகி,
எனக்குப் பிறந்த எருக்கம் பிள்ளை
“எனக்கென்ன அம்மா” என்றான்! சீ! சீ! சீ!
என்போல் இவனுக்கெவள் வாய்ப்பட்டுக் கோழையின்
துன்பக் குடியைத் தோற்றுவிப் பாளோ!

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/41&oldid=1440213" இலிருந்து மீள்விக்கப்பட்டது