பக்கம்:கனிச்சாறு 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10  கனிச்சாறு - நான்காம் தொகுதி


7  கல்வி யொழுங்கு !

எண்ணறக் கற்பார்; எழுத்தறப் படிப்பார்;
இழிசெயல் பற்பல செய்வார்!
விண்ணியல் அறிவார்; விரிகலை உணர்வார்;
வீணுரை பற்பல உரைப்பார்!
மண்ணியல் ஆய்வார்; மருத்துவம் தெளிவார்;
மக்களுக் கிடர்பல இழைப்பார்!
உண்ணுவர்; உடுப்பார்! உறங்குவர் இவரால்
ஒருபயன் இலையெனக் காண்பீர்!

கற்பவை கற்றல், கல்வியென் றறிக!
கற்பவை வழிப்பட முயல்க!
அற்பநூ லுரைகள் ஆயிரங் கற்றும்
ஆவதொன் றிலையென உணர்க!
பொற்பெனப் படுவது பிழைபடா வொழுங்கு!
புகழ்தரு வதும்அது வென்க!
நிற்பவை எல்லாம் நிலையில! புகழே
நிலைபெறும் ஒன்றெனத் தெளிக!

ஒழுங்கிலான் கல்வி, உப்பிலாப் பண்டம்!
ஒப்பிலா தாயினுங் குப்பை!
ஒழுங்கிலான் நல்லுடல் உயிரிலாப் பிண்டம்!
உறுபயன் தருவது மில்லை!
ஒழுங்கிலான் கல்வி, உரமிலாக் கழனி!
ஊர்பெறும் விளைவுகள் தோன்றா!
ஒழுங்கிலான் சொற்கள், ஒழுகுகள் வாயான்
உளறலைப் போற்பயன் உணர்த்தா!

நெஞ்சினில் நேர்மை; நிகழ்ச்சியில் நேர்மை;
நெடிதுயிர் வாழ்க்கையில் நேர்மை!
அஞ்சுவ தஞ்சல், அடங்குவ தடங்கல்
அடுத்தவர் கெடுதலைத் தடுத்தல்,
நஞ்செனத் தீமையை நடுங்குதல் எனவாம்
நல்வழி ஒழுங்கென அறிக!
விஞ்சிடும் புகழால் வாழ்பவ ரெல்லாம்
வேண்டாத் தீமைகொன் றோரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/45&oldid=1424809" இலிருந்து மீள்விக்கப்பட்டது