பக்கம்:கனிச்சாறு 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 15


12

நொச்சிப் போர் !


ஏறெடுத்த தோளும் இளமைக் கனல்மூள
வீறெடுத்த நெஞ்சும், விளைவெடுத்த நற்றுடிப்பும்
பொங்குகடல் போலப் புடைத்தெழூஉம் ஒற்றுமையும்,
கங்குகரை ய்ற்ற கனவு நினைவுகளும்,
வாய்த்த தொருபருவம் கல்வி வளர்பருவம்!
காய்த்துக் கனிகின்ற கற்பனைகள் வாழ்பருவம்!
சீறிவரும் பாம்பைச் சிதைக்கின்ற வல்பருவம்!
ஏறிவரும் வெள்ளத்தில் எம்பிப்பாய் நல்பருவம்!
காற்றைக் குடித்துக் கடும்பசியைக் உள்ளடக்கிக்
கூற்றை எதிர்க்கும் குலையாத செம்பருவம்! 10
குத்திட்ட வேலைக் குடைந்தெறிந்து முன்புண்ணோ
டொத்திட்டுப் பார்க்கும் உரஞ்சான்ற வான்பருவம்!
அப்பருவம் தன்னில் அடியெடுத்து வைத்திருக்கும்
ஒப்பரிய மாணவர்தம் உள்ளத்திற் கொன்றுரைப்பேன்!

“இற்றைத் தமிழர்க் கிருக்கும் முதலெல்லாம்
அற்றைத் தமிழே!” அதுதவிர மற்றவரின்
மானம், தனிப்பெருமை, மங்காத நல்லஉரம்,
வானைச் சிறிதாக்கும் வள்ளன்மை, வாய்மை, அறம்
நஞ்சுண் டமையும் நனிநா கரிகமெனும்
எஞ்சும் நலன்கள் இருந்த சுவடுமிலை! 20
இத்தமிழர்க் குள்ளே எழுச்சியுள்ள செந்தமிழர்
செத்தழிந்து போகாமல் ஆங்காங்கே சிற்றளவில்
வாழ்கின்ற காரணத்தால் செந்தமிழும் வாழ்ந்திருக்கும்!
வீழ்கின்ற வாழ்க்கை விடிவற் றிருக்கையிலே,
கோடிக் குலம்படைப்பார்; பல்சமயக் கூறமைப்பார்;
ஓடிப் பொருள்திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே
மெத்தச் சிறப்பென்பார்; மேலான வாழ்வென்பார்;
பத்துப் பொருளிருக்கும் பன்னூறு நூலிருந்தும்,
ஒன்றும் உணர்ந்தறியார்; ஒண்பெருமை தாமுணரார்;
குன்றும் பொருளுக்குக் குன்றளவு வீண்முயல்வார்; 30

ஈதல் அறியார்; இளகு முளமறியார்;
காதல் அறியார்; கருத்தைத் தெளிந்தறியார்;
பேசும் மொழியறியார்; பேராண்மை பெற்றறியார்;
வீசுகின்ற காசுக்குக் காதம் விரைந்துருள்வார்.
உண்ணும் பொருளும் உணர்ந்துண்ணார்; ஓர்நொடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/50&oldid=1440469" இலிருந்து மீள்விக்கப்பட்டது