பக்கம்:கனிச்சாறு 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 கனிச்சாறு – நான்காம் தொகுதி


எண்ணும் திறனில்லார்; எண்ணியுரை செய்வார்தம்
மெய்ப்பொருளும் தேரார்! மிடிபட்டுங் கண்டுணரார்;
பொய்ப்பொருளே வாழ்வென்று
                                             போலிக் குடும்பமமைப்பார்!
முற்றாத காயுண்பார்; மூழ்கிக் குளித்தெழூஉம்
வற்றாத ஆற்றின் கரையில்நீர் வார்த்தெழுவார்! 40
ஆளும் அரசறியார்; ஆள்வார்தம் கால்பிடிப்பார்;
நாளுந் துயர்ப்படுவார்; நாயடிமை செய்திடுவார்;
பெண்மைச் சிறப்புணரார்; ஆண்மைப் பெருமையிலார்;
எண்மைப் பொருளா எடுத்து விளக்கிடினும்,
தன்னுணர்வு மூண்டுவரார்;
                                             தாழ்வெண்ணம் மாற்றுகிலார்;
என்ன அவர்க்குரைப்பேன் ஏதவர்க்கு விண்டிடுவேன்?
என்றிவ்வா றெண்ணி இடர்ப்படுக்கும் வேளையிலே
ஒன்றென் உளம்படுக்கும் வாழ்க்கைக் குரம்விளைக்கும்!

மாணவரை எண்ணியே உள்ளம் மலர்ந்துய்வேன்!
‘தூணவரே செந்தமிழ்க்கு’ நம்மின் துயர்போக்கும், 50
மாமருந்தாம்! நந்தமிழர் வாழ்வின் ஒளிவிளக்காம்!
பூ, மரு, வேர் கட்டிப் புனைந்ததொரு பூக்கதம்பம்!
முத்தமிழில் பாட்டாவார்; மூவரசில் பாண்டியராம்!
புத்துணர்வும் வல்லறிவும் ஒன்றும் புறக்கூத்து!
மாணவரின் கைகளெழின் மாமலையைத் தூளாக்கும்!
மாணவர்தம் உள்ளாற்றல் மாகடலைத் தூருவிக்கும்!
சோற்றுக்குக் கல்வியெனில் தூதூ அதைவிரும்பார்!
மாற்றவர்க்கு வல்லடிமை செய்ய மனமேவார்!
அன்னவரின் ஆற்றல் அழிவழிக்கும் பேராற்றல்!
என்ன வரினும் எதிர்க்கும் தனியாற்றல் 60
அவ்வாற்றல் யானறிவேன், ஆதலினால் ஈதுரைப்பேன்!
செவ்வி இளமையொடு நல்லறிவு சேர்ந்துவிடில்
எவ்வினையும் எள்முனையாம்; என்பதனால் அன்னவரை
ஒவ்வி மனம்வைக்க வேண்டி உளமுரைப்பேன்;

இவ்வுலகம் கூறும் ‘பொதுமை’ எனுங்கருத்தோ
செவ்வகையாய் அன்றே தமிழர் செறித்ததுதான்;
அற்றைத் தமிழ்நூல் அறியார் புதிதென்பார்!
இற்றைக் குலகரசே ஏற்றதெனச் சொன்னாலும்
அன்ன நிலையை உலகம் அடைதற்கு
முன்னருயர் தன்மை முளைக்கும் நிலைவேண்டும்! 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/51&oldid=1440470" இலிருந்து மீள்விக்கப்பட்டது