பக்கம்:கனிச்சாறு 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 கனிச்சாறு - நான்காம் தொகுதி


ஆகையினால் மாணவர்காள்! அன்னை மொழிபயில்வீர்!
சாகையிலும் செந்தமிழ்க்குச் சாதல் பெருமைதரும்!

முன்னை வடமொழியால் மூண்ட அழிவுபல!
பின்னைப் பலமொழியும் பிற்காலத் தாங்கிலமும்,
தண்டமிழின் மேன்னை, தனித்தன்மை தாங்குலைக்கக்
கண்டும் அமர்ந்திருந்தோம்; இப்பொழுதும் கல்லானோம்!
ஈண்டோ தமிழ்குலைக்க இந்திமொழி வந்ததுகாண்!
வேண்டாத் தமிழ்படிக்க யாரும் விரும்புகிலார்! 110
என்னே இழிவிங்(கு)! எதன்பொருட்டோ மெய்யடிமை?
பன்னூறு வல்லாண்டாய்ப் பட்டதுயர் போதாவோ?

மானம் உளதோ? மறமுளதோ? மாற்றார்பால்
கூனற் பிழைப்பும் குடிப்பிறப்போ? ஊறிவரும்
செங்குருதி தோய்ந்ததோ? செந்தமிழர் மாய்ந்தனரோ?
பொங்குணர்வுத் தீயும் பொறிப்பொறியாய்ச் சாம்பினதோ?
‘வந்த படைநோனாள்; வாயின் முலைபறித்து
வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ முந்தை
முதல்வர்கள் தான்காட்டி மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றான் போருக்’கென் றேபடித்த 120
போர்மறவப் பாட்டும் புறப்பாட்டாய்ப் போனதுவோ?
சீர்மறந்து போனீரோ செந்தமிழீர்! இற்றைக்கே
நொச்சிப்பூச் சூடுவீர்! நும்மொழியைக் காத்திடுவீர்!
எச்சிலிலை என்றும் இனிப்பதிலை! எஃகுளத்தீர்!
வீச்சொன்றே வேண்டும்! இலையேல் விழல்வேண்டும்!
மூச்சு பெரிதோ? முழுவுரிமைப் போர்பெரிதோ?

இந்தி நுழைந்தால் எழிற்றமிழும் தான்குலையும்!
பிந்தித் தமிழர் இனங்குலையும்! இஃதுறுதி!
மாணவரீர்! செந்தமிழ்ச்சீர் வாய்ந்த மறக்குலத்தீர்!
வீணவர்நீர் என்னும் விழல்மொழிக்கா ளாகாதீர்! 130
கன்னித் தமிழ்நிலத்தில் கால்வைப்பார் தம்தலையைத்
துன்னித் துனித்திடுவீர்! தோய்ந்த துயரறுப்பீர்!
குன்றே யனையீர்! குடிகாக்க நொச்சிப்போர்
இன்றே புரிக எழுந்து!

-1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/53&oldid=1440476" இலிருந்து மீள்விக்கப்பட்டது