பக்கம்:கனிச்சாறு 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 21


கண்டதே போலும் காண்பதே போலும் 70
அலர்உரை செய்யும் அந்தப் படிக்கு,யாம்
இலம்இலம் என்றே எழுந்துரை செய்ம்மின்!

செய்திடக் கோடிக் கோடித் தொண்டுகள்!
எய்திடக் கோடிக் கோடி ஏற்றங்கள்!
வானை அளாவி நிற்பன காண்மின்!
மானங் கருதிடும் வினைகளை நோக்குமின்!
தமிழக மக்கட்குத் தக்கன செய்ம்மின்!
தமிழ்மொழிக் கின்னும் தகுவன புரிமின்!
‘சாதிப்’ பேய்களைத் தகர்த்துத் தள்ளுமின்!
சமயப் பூசலைத் தூவென இகழுமின்! 80
மன்பதைக் கள்ளரை மறித்து நொறுக்குமின்!
முன்புதை வுண்ட முத்தமிழ் புதுக்குமின்!
சாலா தனவெலாம் சகதியி லிட்டுத்
தோலா வெற்றியைத் தோள்களில் தாங்குமின்!

கல்லூரிக் கூடம் கலைவிளை கூடம்!
பல்வேறு உணர்வினைப் பயிற்றிடும் நறுங்களம்!

சொல்திறன், வினைத்திறன், மனத்திறன் எனும்படி
பல்திறன் விளைந்திடும் பல்கலைக் கழகம்!

தாழ்விலா வாழ்க்கைக்குத் தகவோர் ஆக்கிடும்
வீழ்விலாக் கல்வி வேளாண்மைக் கழனி! 90

நயனுறு உலகம் நல்லொளி பெறவே
பயனுறு மாந்தப் பயிர்விளை பழனம்!

எண்ணலும் இயற்றலும் இளையோர்க்குப் பயிற்றி
மண்ணுல குய்க்கும் மனம்விளை நல்வயல்!

கூனலும் கோழையும் குறுவுடல் நிமிரவே
மானமும் மறமும் வளர்புகு மறக்களம்!
நேர்மையும் தூய்மையும் நிறைவிற லாண்மையும்
சீர்மையும் பரிசுறச் செய்யும் அறக்களம்!

ஒழுக்கமும் விழுப்பமும் உயர்வுறு புலமையும்
அழுக்கா றின்றி ஆளும் அரசவை! 100

பொய்யும் புனைவும் புன்மையும் தீமையும்
உய்யும் உளம்புகாக் கொய்யும் கொல்களம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/56&oldid=1440479" இலிருந்து மீள்விக்கப்பட்டது