பக்கம்:கனிச்சாறு 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 கனிச்சாறு – நான்காம் தொகுதி


எனைத்துயிர்க் கெல்லாம் இம்மண் ணுருண்டையில்
தினைத்துணை உரிமையுண் டெனும்நெறி மன்றம்!

பிணைந்தும் பின்னியும் இணைந்தும் உயிர்க்குலம்
அணைந்தும் வாழ்ந்திடப் பயின்றிடும் அன்பகம்!

கயமையும் கொலைமையும் களவும் புகுமன
மயக்குநோ யகற்றி மருந்திடு மருந்தகம்!

நாட்டுப் பற்றையும் நம்மொழிப் பற்றையும்
பாட்டுத் திறத்தினால் பயிற்றும் பாசறை! 110

தீமையை வெல்லவும் திறம்பட உழைக்கவும்
ஏமக் கருவிகள் இயற்றும் பட்டடை!

உயிர்பெறு ஊதியம், இழப்பு,என் பவற்றை
மயர்வற நிறுத்திடு வாணிக ஆவணம்!

- அத்தகு பெருமையும் ஆன்றவிந் தடங்கிய
வித்தக ஏற்றமும் விளங்கிடு கழகத்துப்
பொத்தகத் துணைபெறு புதுமைசால் மாணவீர்!
எத்தகு திறத்தினை இத்தரைக் கீகுவீர்?
செத்தழிந் திடவோ உடலுயிர் செறித்தீர்?

இனியே ஆயினும் ஏற்றம் பெறுகுதிர்! 120
தனியே ஆயினும் தளர்வுறல் வேண்டா!
கல்விக் காலத்துக் கற்பன கற்க!
வல்வினைக் காலத்து வல்லாண்மை பெறுக!
இற்றைத் தமிழகம் மாணவர் தம்மையே
ஒற்றைத் துணையாக் கொண்டதை உணர்க!
புன்மை வினைகளைப் புறத்தே தள்ளுக!
மின்குழாம் அன்ன திரைப்பட மினுக்கிகள்
தம்மேல் எண்ணம் படர்வதைத் தகர்க்க!
பிடிப்புடை, விரைமா பூசிய முகங்கள்
துடிப்புளம், வெற்றுரை, பழிசெய் நூற்கள் 130
- என்னும் இவைதாம் மாணவர் உலகெனும்
இழிவுரை நீக்கி ஏறுபோல் எழுந்து
முத்தமிழ் பேணுக! மாணவ மணிகளே!
புத்துல கெய்துக! புதுக்கலை புதுக்குக!
நாட்டின் விடுதலை நண்ணுக!
ஏட்டின் வரலாறு எழுதுக இன்றே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/57&oldid=1440481" இலிருந்து மீள்விக்கப்பட்டது