பக்கம்:கனிச்சாறு 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 23


14

தம்பி ! நீ, புதிய தமிழன் !


தம்பி! நீதான் புதிய தமிழன்!
இம்மியும் கீழ்மை உன்னிடம் இல்லை.
சாதிச் செருக்கைச் சகதியில் போடு!
ஓதிய கல்வியும் ஒழுங்கும் கடைப்பிடி!
உலகை உயர்த்துதல் உன்றன் கடமை!
கலகம் செய்வோரைக் காறித் துப்பு!

உயர்ந்த கொள்கையும் உரங்கொள் நெஞ்சும்
அயர்வில் லாத அரும்பே ராற்றலும்
கொண்டு விளங்கு; தீமையைக் கொல்வாய்!
பண்டைச் சிறப்பையும் புதுமைப் பயனையும் 10
ஒன்றாய்க் கலந்து ஓர் உண்மைக் கொள்கையை
நன்றாய் வகுத்து நாடெலாம் பரப்பு!

மக்களை ஒன்றென மதித்து நடப்பாய்!
இக்கால் உலகம் இழிந்து செல்வதைத்
தடுத்து நிறுத்தடா புதுமைத் தம்பியே!
எடுத்த கொள்கையில் வெற்றியை ஏந்து!
செயல்செயப் புறப்படு! சீர்செய்! உலகத்தை!
தயக்கம் இன்றிக் கீழ்மையைத் தாக்கு!
மேல் பிறப் பென்றும் கீழ்ப்பிறப் பென்றும்
நால்வகை யாக நம்மவர் நாட்டிய 20
குலப்பிரி வுகளைக் குப்பையில் கிடத்து!

நிலமெலாம் ஒன்று! நிலத்துள மக்களும்
சரிநிகர் என்று சாற்றுவாய் தம்பி!
புரியும் தொழில்களால் பிரிவிலை என்பாய்!
உள்ளம் ஒன்றே மக்களை உணர்த்தும்!
குள்ள மாந்தரின் கூற்றைத் தகர்ப்பாய்!

எல்லா ஊரும் ஊரென ஏற்பாய்!
எல்லா நலமும் எல்லார்க்கும் என்பாய்!
ஊரை ஏய்க்கும் உலுத்தரை வீழ்த்து!
போரைக் கொண்டு, இவ்வுலகைப் பொசுக்கிடும் 30
தீய நினைவைத் தீயுனுள் தள்ளு!
ஏற நிகரமை எடுத்து முழக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/58&oldid=1440484" இலிருந்து மீள்விக்கப்பட்டது