பக்கம்:கனிச்சாறு 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 கனிச்சாறு – நான்காம் தொகுதி


காற்றும் நீரும் கதிரவன் ஒளியும்
நேற்றும் இன்றும் நாளையும் நிலத்தின்
எல்லா உயிர்க்கும் சரிநிகர், என்று
சொல்லால் செயலால் விளக்கிடு கண்ணே!

நிலமும் வளமும் நிகரென்று கூறுவாய்!
‘இலம்’என் றிருப்பார் தமைக்கண்டு இரங்கு!
உண்ணச் சோறிலாது ஒருவன் வாடவும்
எண்ணிலா நலன்கள் ஒருவன் எய்தவும் 40
இருக்கின்ற நிலைமை எப்படி வந்தது?

கருக்கின்ற வெயிலில் ஒருவன் காயவும்
நிழலில் ஒருவன் நீட்டிப் படுக்கவும்
பழமை உலகம் ஏன்பார்த் திருந்தது?

கட்ட ஒருமுழக் கந்தலும் இன்றிக்
கொட்டும் மழையிலும் குளிரிலும் ஒருவன்
வாடிக் கிடப்பதும் மாடியில் ஒருவன்
ஆடிக் களிப்பதும் எப்படி ஆனது?

உழைத்துழைத் தொருவன் ஓடாய்ப் போவதும்
உழைப்பிலா தொருவன் உண்டே உருள்வதும் 50
எப்படிச் சரியென ஏற்பது தம்பி!

அப்படி இருந்திடும் அமைப்பை மாற்றுவாய்!
பிறந்தவர் யாவரும் மாந்தப் பிறப்பே!
சிறந்தவர் என்பார் செயலால் உயர்ந்தவர்!

உலக நலன்கள் யாவர்க்கும் ஒன்றே!
சிலர்நலம் எய்தவும் பலர்துயர் எய்தவும்
வழிசெய் உலகினை மாற்றி வகுப்பாய்!
பழிசெய் வோரைக் களையெனப் பறித்தெறி!

ஆங்கொரு பேயன் அளவிலாப் பொருள்மேல்
தூங்குவான் ஆயின் அவனைத் துரத்து! 60
பறித்தவன் பொருளை யாவர்க்கும் பங்கிடு!
குறித்துவை இதனை உன்றன் நாட் குறிப்பில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/59&oldid=1440485" இலிருந்து மீள்விக்கப்பட்டது