பக்கம்:கனிச்சாறு 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 27


இளமைக் கழகே கல்வியை ஏந்தல்!
கல்விக் கழகு கடமையும் ஒழுங்கும்!
ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்!

எண்ணறப் படித்தும் எழுத்தறக் கற்றும்
கண்ணெனும் ஒழுங்கும் கடமையுங் கல்லான்
மக்களில் தாழ்ந்தவன் எனவே மதிக்க!

தக்கவை இவற்றை உளத்து வை தம்பி!
மாணவப் பருவம் மாண்புடைப் பருவம்!
மாண்பிலார் என்றும் மாணவர் ஆகார். 40


-1968


16

தமிழ்த் தம்பியே ! உலகைத் திருத்தடா !


தம்பி! இதுகேள்! தங்கையே, இதுகேள்!
செம்பொன் மணிபோல் சிலஉரை சொல்வேன்!

உருண்டுகொண் டிருக்கும்இவ் வுலக உருண்டையில்
இருண்ட பகுதியும் ஒளிசேர் பகுதியும்
அரை அரை இல்லையா? அருமைத் தம்பியே!
இருள்ஒளி யாவதும் ஒளி இருள் ஆவதும்
மாறி மாறி வருஞ்செயல் இல்லையா?
கூறுதற் கரிய, இவ் வானப் பரப்பினுள்
எண்ணுதற் கரிய விண்மீன் கூட்டமும்
நுண்ணொளி வீசிடும் பால்வழித் திரட்சியும்
ஆயிரம் ஆயிரங் கோடி அளவின!

நீயும் நானும் நில்லாது எண்ணினும்
மாயும் வரைக்கும் எண்ணி மாளாது!
அத்துணைப் பெரியதிவ் வகன்ற விண்வெளி!
இத்துணைப் பெரிய இவ்விண் வெளியிலே
நுண்ணிய துகள்போல், நுண்ணிய அணுப்போல்
மண்ணுல குருண்டை மனத்தில்வை தம்பி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/62&oldid=1440494" இலிருந்து மீள்விக்கப்பட்டது