பக்கம்:கனிச்சாறு 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 31


17

தம்பி ! நீதான் நாளைய தலைவன் !


தம்பி! நீதான் நாளைய தலைவன்!
வெம்பிய கனிபோல் வீணா காதே!
நம்பிக்கை வை, நீ! நாட்டை நடத்துவாய்!
நல்லன நினைப்பாய்; நல்லன பேசுவாய்!
நல்லன செய்வாய்; நல்லன பெறுவாய்!
சோம்பலை அகற்று; சுறுசுறுப் பாயிரு!
ஓம்புக ஒழுக்கம்! கல்வியால் உயர்வாய்!

கதிரவன் எழுமுன் காலையில் எழுவாய்!
புதிய நூல்படி! பழையன நினைவுகொள்!
அறிவியல் நூல்கள், அறிஞரின் கதைகள்,
நெறிமுறை நூல்கள், நல்லிசைப் பாக்கள்,
எனப்பல நூல்படி; இழிந்த நூல்தவிர்!

அச்சில் வருவன எலாம்நூல் ஆகா,
எச்சில் இலையினில் மீந்தன வற்றை
நாய்உணல் ஆகும்; நாம் உணல் ஆகா!
நோயால் புழுத்தவன் உடலைநல் உடையால்
மூடி வருதல்போல் அறிவிலா மூடர்
எழுதத் தகாதன எழுதி,யந் நூலை
அழகிய அட்டையால் வழவழப்பாக
அச்சிட்டு விற்பர்; அவற்றை விலக்கு!
“கற்க கசடற; கற்பன வற்றை”
என்றார் வள்ளுவர் இதன்பொருட் டன்றோ!

நாளும் செய்தித்தாள் நன்கு படித்துவா!
தாளெலாம் செய்தித் தாள்கள் ஆகா!
பொய்ப்பன, புளுகைப் புனைவன உண்டு!
உய்ப்பன மக்கட்கு உதவு வன,சில!
திரைப்பட நடிகர் நடிகையர் கதைகளை
உரைப்பன சில! அவர் உருவப் படங்களை
அச்சிட்டு உளத்தை அழிப்பன பலப்பல!
நச்சென அவற்றை நெருங்கவும் நடுங்கு!
“ஒழுங்கிலாக் கல்வி உப்பிலாப் பண்டம்”.
ஒழுக்கம் உயிரெனும் குறளுரை உணர்வாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/66&oldid=1440500" இலிருந்து மீள்விக்கப்பட்டது