பக்கம்:கனிச்சாறு 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 37


கொம்பின்நுனி நீண்டாலென்ன?
கொத்துமலர் பூத்தாலென்ன?
வெம்பினைநீ பச்சைப்படு பிஞ்சில் - இனி
விளைந்திடுமோ அமைதியுன்றன் நெஞ்சில்!

பகுத்தறிவும் வாய்ந்தாலென்ன?
பல்பொருளும் ஆய்ந்தாலென்ன?
வகுத்தறியும் அறிவிழந்து நின்றாய், இருள்
வாழ்க்கையிலே உனைமறந்து சென்றாய்!

மிகவுயர்ந்த கட்டிடங்கள்!
மின்விளக்குத் தோரணங்கள்!
அகவுயர்ச்சி எனில், அடடா இல்லை! அவை
அத்தனையும் உனையழிக்கும் எல்லை!

-1969


22

மக்கள் என்று திருந்துவாரோ ?


பொன்னன் எனும்சிறு பையன் - நகர்ப்
பொத்தகக் கடைநோக்கிப் போயினன் ஓர்நாள்!
மின்னும் எழில்வண்ணத் தோடு - அட்டை
மேனி பளபளக் கும்கதை நூல்கள்,

கண்ணைப் பறித்திடு மாறு - பல
காட்சி தருகின்ற கன்னியர் தோற்றம்
விண்ணைப் பழித்திடும் போக்கில் - தம்
வெற்றுடல் காட்டிடுந் தாளிகைக் கூட்டம்.

கொட்டை எழுத்தினில் சூடாய் - செய்தி
கொடுத்திடும் இழிநடை நாட்கம்பித் தாள்கள்
அட்டை பெருத்திடும் நூல்கள் - துப்
பறிகின்ற புதினங்கள், பாலியல் நூல்கள்.

சட்டையின் பையளவுள்ள - பல
சாய்க்கடைக் குப்பைகள், பேய்க்கதை நூல்கள்,
அட்டைகள் போலக் கயிற்றில் - சுவர்
ஆணியில்,எங்கும் தொங்கின; மீதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/72&oldid=1440510" இலிருந்து மீள்விக்கப்பட்டது